இதயம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களும், இருதய நோய் மருத்துவர்களும் சென்று வணங்கினால் நிச்சயம் நலம் பெறுவதாக நம்பப்படும் சிவாலயம் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இருதயாலீஸ்வரர் திருக்கோவில்
இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் மக்களை பெரும்பாலானோர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு அளவில்லாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இன்றைய அவசரமான உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் யாரையும் விட்டு வைக்கவில்லை. அரும்பாடு பட்டு சேகரித்த பணம் எல்லாம் அறுவை சிகிச்சைக்காக கொண்டு குவிக்கும் போது மனிதன் துவண்டு போய் விடுகிறான்.
இறுதியாக அவனது எண்ணமெல்லாம் இறைவனின் நோக்கி திரும்புகிறது. இறைவன் மட்டுமே தன்னை காக்க முடியும் என்ற நம்பிக்கை இதயத்துக்குள் வேரூன்றி விடுகிறது.
அந்த நம்பிக்கை என்றுமே வீண் போகாது என மெய்ப்பிக்கும் தெய்வமான இருதயாலீஸ்வரர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்ற ஊரில் கோவில் கொண்டு அருள் வழக்குகிறார்.
உலகை ஆளும் சிவன் இக்கோவிலில் இதய நோயால் துன்புற்றிருப்பவர்கள் இவ்விறைவனை மனமுருக வேண்டிப் பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது திண்ணம்.
நோயாளிகள் மட்டுமல்ல இருதய நோயை தீர்க்கும் பெரும் மருத்துவர்களும் இங்குள்ள இறைவனை வணங்கி தங்களை நாடிவரும் இதய நோயாளிகள் நலம் பெற வேண்டுமென்று வழிபட்டுச் செல்கின்றனர்
மிகுந்த சக்தியும் அளவில்லாத ஆற்றலும் நிறைந்த இந்த அதிசய கோவில் ஒரு சிவ தொண்டரின் மனதில் உருவாகி அதில் இறைவன் கருவாகி அமர்ந்த வரலாறு கேட்போரை நெகிழ்ச்சி அடைய செய்கிறது.
உடல் முழுவதும் திருநீறோடு காணப்பட்ட பூசலார் எனும் சிவனடியார் திருநின்றவூரில் ஒரு வில்வ மரத்திற்கு கீழே சிவலிங்கத்தை வைத்து தினமும் வழிபாடு செய்து வந்தார். வெயிலிலும் மழையிலும் இருந்த தனது இறைவனுக்கு ஒரு கோவில் எழுப்பும் முயற்சி செய்தபோதும் அவரது வறுமையின் காரணமாக அது முடியாமலே போனது.
நிஜத்தில் கோவில் எழுப்ப முடியாவிட்டாலும் தன் இதயத்தில் இறைவனுக்கு கோவில் எழுப்பினார். அவர் எழுப்பிய அந்த இதய கோவிலில் இறைவன் வீற்றிருப்பதை அறிந்த பல்லவ மன்னன், சிவனடியாரை வணங்கி அந்த இடத்திலேயே ஒரு சிவாலயத்தையும் எழுப்பினார் .
இருதயத்தால் கட்டிய ஆலயம் என்பதால் இருதய நோய்கள் உள்ளவர்கள் இங்கு வந்து இருதயாலீஸ்வரரையும், இறைவி மரகதம்பாளையும், பூசலாரையும் வேண்டிக்கொண்டால் நோய் நீங்கும் என்பது காலம் காலமாய் திகழும் நம்பிக்கையாகும்.
இந்த சிவாலயத்தை சுற்றி விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்ரமணியர், நந்திதேவர், சண்டீகேஸ்வரர், நடராஜர் சன்னதிகளும் அமைந்துள்ளதோடு சங்கு சக்கரத்தோடு மகாவிஷ்னு காட்சியளித்து அருள் பாலிக்கிறார்.
சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் வேறு எங்கும் காண முடியாதபடி இறைவனின் .கருவறையில் மேற்கூரையில், நான்கு பிரிவுகளுடன், இதய வடிவம் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது.
இதய நோய் உள்ளவர்கள் திங்கள் கிழமை தோறும் இங்குள்ள இறைவனை வழிபட்டு தீபம் ஏற்றி தனது சக்திக்கேற்ப அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் நல்ல பலன் கிடைப்பதாக நம்பிக்கையுடன் பலனடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்