திருவண்ணாமலை மகா தீபம் எத்தனை கிலோமீட்டர் தூரத்திலிருந்து தெரியும்? இதற்குப் பின்னால் இவ்வளவு அறிவியல் இருக்கா? 
ஆன்மீகம்

திருவண்ணாமலை மகா தீபம் எத்தனை கிலோமீட்டர் தூரத்திலிருந்து தெரியும்? இதற்குப் பின்னால் இவ்வளவு அறிவியல் இருக்கா?

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிக்கும் வகையில் மூன்று அடுக்குகளைக் கொண்ட பஞ்சலோகத்தால் (ஐந்து உலோகங்கள்) இது செய்யப்பட்டுள்ளது.

Antony Ajay R

திருவண்ணாமலை கோயிலின் பின்புறம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உள்ளது. இந்த மொத்த மலையும் சிவபெருமானாக வழிபடப்படுகிறது.

இந்த மலையின் உச்சியில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் பிரசித்தி பெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். இந்தத் தீபத்தில் சிவபெருமானே அக்னி வடிவில் உருவெடுத்து இருப்பதாக நம்பிக்கை உள்ளது.

புராணக்கதை என்ன சொல்கிறது?

திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் இடையே "நான்தான் பெரியவன்" என்ற அகந்தை வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்கள் இடையே முதலும் முடிவும் இல்லாத தீப்பிழம்பாக சிவபெருமான் தோன்றியதாகவும் கதை உள்ளது. அந்தத் தீப்பிழம்பின் தொடக்கத்தையும் முடிவையும் காண முடியாமல் பிரம்மாவும் திருமாலும் திணறினர். "நான்" என்ற அகந்தைக்கு எதிராக இந்தத் தீப்பிழம்பு நினைவுகூரப்படுகிறது.

தீபச் சுடரானது மகாலட்சுமியாகவும், அதில் தோன்றும் ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது. இதனால் மூன்று தேவியரின் சங்கமமாகவும் சிலர் தீபத்தை வணங்குகின்றனர்.

மகா தீபம் ஏற்றுவதில் சவால்கள்!

மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் பல கிலோமீட்டர் தொலைவைக் கடந்தும் தெரியும் அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும். இதற்காகச் சுமார் 5 அடி 9 அங்குலம் உயரமும், 310 முதல் 320 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்ட கொப்பரை பயன்படுத்தப்படுகிறது.

7 கிலோமீட்டர் தொலைவுள்ள கரடுமுரடான மலைப்பாதை வழியாக, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு இந்தக் கொப்பரைப் பத்திரமாகக் கொண்டு செல்லப்படுகிறது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிக்கும் வகையில் மூன்று அடுக்குகளைக் கொண்ட பஞ்சலோகத்தால் (ஐந்து உலோகங்கள்) இது செய்யப்பட்டுள்ளது. அதில் 'சிவ சிவ' என எழுதப்பட்டிருக்கும். நந்தி, சிவலிங்கம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் உருவங்களும் வரையப்பட்டுள்ளன.

இந்தத் தீபத்தை இன்று மட்டுமல்லாமல் தொடர்ந்து 11 நாட்களுக்குப் பார்க்க முடியும். தீபம் அணையாமல் எரிய வேண்டும் என்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் ஆவின் நிறுவனத்திடமிருந்து சுமார் 4,500 கிலோ (சுமார் 3,500 லிட்டர்) சுத்தமான நெய் கொள்முதல் செய்யப்பட்டு மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர, பக்தர்களும் காணிக்கையாக நெய் வழங்குகின்றனர்.

மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது நெய்யில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் அதிகம் என்பதால், அது எரியும்போது வெப்பம் அதிகமாகவும் புகை குறைவாகவும் இருக்கும். வெளிச்சமும் பிரகாசமாக இருக்கும்.

சுமார் 1,000 முதல் 1,200 மீட்டர் (சில ஆண்டுகளில் 1,500 மீட்டர் வரை) நீளமுள்ள புதிய பருத்தி காடாத் துணி திரியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் வாசனைக்காகவும் தீபம் நன்கு பற்றியெரிவதற்காகவும் கற்பூரமும் சேர்க்கப்படுகிறது.

இந்தத் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு வரை தெரியும் என்கிறார்கள். மேலும், இதன் வெப்பமும் பெருமளவில் பரவும். திருவண்ணாமலை மக்கள் தங்கள் வீடுகளிலும் கடைகளிலும் கூட இந்தப் பௌர்ணமி தினத்தில் தீபம் ஏற்றுவார்கள். இது காற்றில் ஈரப்பதத்தைக் குறைக்கும். வெப்பத்தால் ஈர்க்கப்படும் பூச்சிகளும் நெருப்பில் அழிந்துவிடும். இப்படியாக பழங்காலம் முதல் தீபம் ஏற்றும் நடைமுறை நல்வாழ்வுக்கும் உதவியிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்