

திருவண்ணாமலை, வருடத்தில் பாதி நாட்கள் திருவிழாக் கோலமாகவே இருக்கும் ஒரு கோவில் நகரமாகும். இது தவிர, வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிகச் சிறப்பானதாகும். இத்திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத் திருவிழா ஆகும். இந்தப் பத்தாம் நாளன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும். இந்தத் தீபமானது தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியக்கூடியதாகும்.
கார்த்திகை தீபம் மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற மலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலையாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த மலை ஒரு செயலிழந்த எரிமலை என்றும் குறிப்பிடப்படுகிறது. திருவண்ணாமலை ஒரு எரிமலை என்பதற்கு இந்து புராணம் ஒரு கதையையும், புவியியல் ஆய்வுகள் சில கருத்துகளையும் முன்வைக்கின்றன.
புராணத்தின்படி, கடவுள் சிவபெருமான் அந்த இடத்தில் (திருவண்ணாமலையில்) பூமிக்கும் வானத்துக்கும் நெருப்பு வடிவில் காட்சியளித்ததாகவும், அதனாலேயே அது நெருப்பு மலையானது என்றும் சொல்லப்படுகிறது. அதன்படி, சிவபெருமான் அக்னிப் பிழம்பாக நின்ற தலமாக இது போற்றப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் மலை உச்சியில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், இந்த அக்னி தத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், நெருப்பாய் நின்ற சிவனின் முடியைக் காண பிரம்மா அன்னப் பறவையாகவும், அடியைக் காண விஷ்ணு பன்றியாகவும் உருமாறி முயன்று தோற்றதாகவும் அப்புராணம் குறிப்பிடுகிறது.
சிவபெருமானின் இந்த ஜோதி வடிவமே திருவண்ணாமலையில் மலையாகக் காட்சியளிப்பதாக ஆன்மிக நம்பிக்கை உள்ளது. இதை நினைவுகூரும் வகையில்தான் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் வழக்கம் தொடர்வதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாகும். பிற தலங்களான சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்கும் தலங்களாகக் கருதப்படுகின்றன.
அறிவியல் ஆய்வுகளின்படி, இமயமலை உருவாவதற்கு முன்பே உருவான மிகப் பழமையான மலை திருவண்ணாமலை என்று சொல்லப்படுகிறது. இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்களின்படி, இம்மலை சுமார் 250 முதல் 350 கோடி ஆண்டுகள் பழமையானது. புவியியல் ரீதியாக, இது பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செயலிழந்த ஒரு 'இறந்த எரிமலை' என்று பல ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. பூமியின் ஆரம்பகால உருமாற்றத்தின்போது எரிமலைக் குழம்பு வெளிப்பட்டு, பின்னர் குளிர்ந்து கடினமான பாறையாக மாறியதன் மூலமே இந்த மலை உருவானதாகச் சில புவியியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுதோறும் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. ஐந்து அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, ஆயிரம் மீட்டர் காடாத் துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகா தீபம் ஏற்றப்படும். மலையைச் சுற்றி 14 கி.மீ. தூரம் கிரிவலம் செல்லும் வழக்கமும் உள்ளது. இதற்காகத் தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இந்தத் தீபத்தை நேரில் காண இன்று திருவண்ணாமலைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்