இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது ஹாட் டாபிக்காக மாறியிருப்பவர் வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 15 வயதே ஆன இந்த இளம் வீரர், மிக விரைவில் இந்திய சீனியர் அணியில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் வைபவ் பெயர் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அஜித்கர் தலைமையிலான தேர்வுக் குழு, அணியின் பலத்தை சோதிக்க இரண்டாம் கட்ட வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த சிறுவனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கையில், அயர்லாந்து தொடருக்கான ரேஸில் வைபவ் சூர்யவன்ஷி முன்னிலையில் இருப்பதாகவும், மற்ற சீனியர் வீரர்களுடன் சேர்த்து இவரது பெயரையும் தேர்வுக்குழுவினர் பரிசீலனை செய்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். அயர்லாந்து தொடர் மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ஜிம்பாப்வே தொடரிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், மிகக்குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக விளையாடிய வீரர் என்ற பெருமையை இவர் பெறுவார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ், தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிராக 26 பந்துகளில் 78 ரன்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 52 ரன்கள் என சிக்ஸர் மழை பொழிந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 14 பந்துகளில் அவர் விளாசிய 39 ரன்கள், இவரை உடனடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலுக்கச் செய்துள்ளது.
ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூட வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து போயுள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோரின் சாதனைகளை முறியடித்து, இந்தியாவிற்காக அறிமுகமாகும் மிக இள வயது வீரர் என்ற சாதனையை வைபவ் படைக்க தகுதியானவர் என்று அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். திறமையும் இளமையும் ஒருங்கே அமைந்த இதுபோன்ற ஒரு வீரர் கிடைப்பது மிகவும் அபூர்வம் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அருண் துமால் மட்டுமின்றி, முன்னாள் ஜாம்பவான்களான இர்ஃபான் பதான் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோரும் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்குத் தேவையான அனைத்து தகுதிகளும் இந்த 15 வயது சிறுவனுக்கு இப்போதே வந்துவிட்டது என்று அவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். இப்போதே இவருக்கு வாய்ப்பளித்தால் இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய சொத்தாக இவர் மாறுவார் என்பதே இவர்களின் கருத்தாக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியில் 16 வயது 205 நாட்களில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் தான் இளம் வயது வீரராக நீடிக்கிறார். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பெண்கள் அணியைச் சேர்ந்த ஷஃபாலி வர்மா 15 வயது 7 மாதங்களில் அறிமுகமாகி தேசிய சாதனையைப் படைத்துள்ளார். ஒருவேளை அயர்லாந்து தொடரில் வைபவ் களமிறக்கப்பட்டால், சச்சின் மற்றும் ஷஃபாலி ஆகிய இருவரின் சாதனைகளையும் ஒரே நேரத்தில் முறியடித்து புதிய சரித்திரம் படைப்பார்.
அயர்லாந்து தொடருக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ள இந்த முக்கிய தொடரில் மட்டும் முன்னணி சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே போன்ற தொடர்களில் வைபவ் போன்ற இளம் ரத்தங்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறமையை உலகிற்கு காட்ட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.