2026 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ₹131 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது. இது இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணிக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பரிசுத் தொகையாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றபோது வழங்கப்பட்ட ₹125 கோடி என்ற சாதனையை பிசிசிஐ தற்போது முறியடித்துள்ளது.
சூரியகுமார் யாதவ் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி, இந்தத் தொடர் முழுவதும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. பிசிசிஐ அறிவித்துள்ள இந்த ₹131 கோடி பரிசுத் தொகையானது, அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள், தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் மற்றும் இதர உதவியாளர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்படும்.பரிசுத் தொகை எவ்வாறு பிரிக்கப்படும் என்பது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், இதில் மிகப்பெரிய பங்கு வீரர்களுக்குச் சென்றடையும் என்று பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அவர்களது பொறுப்பு மற்றும் படிநிலைக்கு ஏற்பத் தொகை வழங்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், தேர்வுக் குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பல புதிய சாதனைகளைத் தடம் பதித்துள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
அதுமட்டுமன்றி, உலகக் கோப்பையைத் தனது சொந்த மண்ணில் வென்ற முதல் அணி என்ற வரலாற்றையும் இந்தியா படைத்துள்ளது.பிசிசிஐ வழங்கிய பரிசுத் தொகை தவிர, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சார்பாகவும் இந்திய அணிக்கு பெரும் தொகை வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் சுமார் 2.34 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹21.5 கோடி) வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கு 1.17 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹10.75 கோடி) பரிசாகக் கிடைத்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.