விளையாட்டு

இவ்வளவு திமிரா? நடுவர் சொல்லியும் கேட்காத டிம் டேவிட்! கையில் இருந்த மேட்ச் ஃபீஸ் காலி! என்ன நடந்தது?

டிம் டேவிட்டின் ஒழுங்கு நடவடிக்கை கணக்கில் ஒரு 'டிமெரிட்' புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம்

மாலை முரசு செய்தி குழு

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில், ஆர்சிபி நட்சத்திர வீரர் டிம் டேவிட் செய்த ஒரு செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் போது அம்பயர்கள் கொடுத்த உத்தரவை மதிக்காமல் பந்தைக் கொடுக்கத் தாமதம் செய்ததற்காக அவருக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் 2.4 பிரிவை மீறியதற்காகவும், நடுவர்களின் கட்டளையைப் புறக்கணித்ததற்காகவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், டிம் டேவிட்டின் ஒழுங்கு நடவடிக்கை கணக்கில் ஒரு 'டிமெரிட்' புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் ஆர்சிபி அணியின் பேட்டிங் இன்னிங்ஸின் போது 18-வது ஓவரில் முதன்முதலில் தொடங்கியது. அப்போது நடுவர்கள் பந்தை மாற்ற முயன்றபோது, டிம் டேவிட் அந்தப் பந்தை வாங்கித் தானே பரிசோதனை செய்ய முயன்றுள்ளார். நடுவர்கள் பலமுறை கேட்டும் அவர் பந்தைத் திருப்பித் தராமல் அடம் பிடித்துள்ளார். இதே போன்ற ஒரு மோதல் 20-வது ஓவரிலும் மீண்டும் அரங்கேறியது. அப்போதும் நடுவர்களின் அறிவுறுத்தல்களை மதிக்காமல் பந்தைத் தன்னிடமே வைத்துக்கொண்டு அவர் தாமதம் செய்துள்ளார். ஒரு பேட்ஸ்மேன் பந்தை வைத்துக்கொண்டு இதுபோல விளையாடுவது விதிகளுக்கு எதிரானது என்பதால், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இறுதியில் தனது தவறை ஒப்புக்கொண்ட டிம் டேவிட், தண்டனையை ஏற்றுக்கொண்டார்.

அதே போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததால், அதாவது 'ஸ்லோ ஓவர் ரேட்' காரணமாக அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் மும்பை அணி செய்யும் முதல் தவறு என்பதால் விதிகளின்படி இந்தத் தொகை அபராதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் இதே தவறு நடந்தால் கேப்டனுக்குத் தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதால் மும்பை அணி நிர்வாகம் சற்று கவலையில் உள்ளது. ஒருபுறம் வெற்றிக்காகப் போராடும் கேப்டன்களுக்கு இதுபோன்ற அபராதங்கள் கூடுதல் நெருக்கடியைத் தருகின்றன.

போட்டியின் முடிவைப் பொறுத்தவரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஒரு த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, பில் சால்ட் (36 பந்துகளில் 78), விராட் கோலி (38 பந்துகளில் 50) மற்றும் கேப்டன் ரஜத் படிதார் (20 பந்துகளில் 53) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இறுதியில் சர்ச்சையில் சிக்கிய டிம் டேவிட்டும் 16 பந்துகளில் 34 ரன்கள் விளாசி அணிக்கு வலுவான ஸ்கோரைத் தந்தார். பதில் இன்னிங்ஸ் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.