ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், சமூக வலைதளங்களில் 'வ்லாக்' (Vlog) செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிசிசிஐ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அர்ஷ்தீப் சிங் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் விமானத்தில் பயணம் செய்யும் போது 'வேப்' எனப்படும் மின்னணு சிகரெட்டை பயன்படுத்தியது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது பெரும் விவாதத்தை கிளப்பியது. அகமதாபாத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து வீரர்களோ அல்லது பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகமோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், ஐபிஎல் தொடர் முடியும் வரை அர்ஷ்தீப் சிங் இது போன்ற வீடியோக்களைப் பதிவிடக் கூடாது என்று பிசிசிஐ கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் இது போன்ற சர்ச்சைகள் ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது டிரெஸ்ஸிங் ரூமில் 'வேப்' பயன்படுத்தியது கேமராவில் சிக்கியதால், அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வரும் இதுபோன்ற ஒழுக்கமற்ற செயல்களைத் தடுக்க, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா அனைத்து 10 அணிகளுக்கும் 7 பக்கங்கள் கொண்ட புதிய கட்டுப்பாட்டு விதிகளை அனுப்பியுள்ளார். அதில், வீரர்கள் 'ஹனி-டிராப்' (Honey-trap) போன்ற வலைகளில் சிக்காமல் இருக்கவும், ஹோட்டல் அறைகளில் தேவையற்ற நபர்களை அனுமதிக்காமல் இருக்கவும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைகளில் எப்போது வேண்டுமானாலும் அதிகாரிகள் திடீர் சோதனை (Surprise checks) நடத்துவார்கள் என்றும், மேனேஜரின் அனுமதி இல்லாமல் வீரர்களின் அறைக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், டிரெஸ்ஸிங் ரூம் மற்றும் மைதானத்தின் பிற பகுதிகளில் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது இந்திய சட்டப்படி குற்றமாகும். இதை மீறுபவர்கள் மீது பிசிசிஐ விதிகள் மட்டுமின்றி, சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், போட்டி நடக்கும் போது டக்-அவுட் பகுதியில் இருக்கும் வீரர்கள் அல்லது பயிற்சியாளர்களுடன் அணி உரிமையாளர்கள் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐபிஎல் தொடரின் கண்ணியத்தைக் காக்க இதுபோன்ற கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் விளக்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.