விளையாட்டு

ஆசிய கோப்பை இறுதிப் போட்டித் தோல்வி.. பாகிஸ்தான் பயிற்சியாளரை ரவுண்டு கட்டி அடித்த ஷோயப் அக்தர்!

நாங்கள் 175 ரன்களை எட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் – இதில் மிகவும் அதிகமான தவறுகள்..

மாலை முரசு செய்தி குழு

ஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அடைந்த தோல்விக்குப் பிறகு, அந்நாட்டின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசனைத் கடுமையாகச் சாடியுள்ளார். அணியின் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டிய அக்தர், இந்த தோல்விக்குக் காரணமான பல தவறான முடிவுகள் மற்றும் வீரர்கள் தேர்வில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

தோல்வியின் பின்னணி

முதலில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்ட பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் 1 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் என்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த எளிய இலக்கை இந்திய அணி சில தடுமாற்றங்களுக்குப் பிறகு, இறுதி ஓவரில் எட்டியது. இந்திய அணியின் திலக் வர்மா 69 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஷோயப் அக்தர், அணியின் நிர்வாகம் மற்றும் பயிற்சியாளரின் முடிவுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "சரியாகச் சிந்திக்கத் தெரியாத நிர்வாகத்தின் தவறு இது. அறிவற்றப் பயிற்சி முறை என்று நான் சொல்வேன், அத்தகையக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும். ஆனால், இது அறிவற்றப் பயிற்சி முறைதான். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், போட்டியில் வெற்றி பெற வைக்கும் வீரரான ஹசன் நவாஸ் இல்லை, அதன்பின்னர் சல்மான் மிர்ஸாவும் ஆடும் லெவனில் இல்லை. இது மீண்டும் கொஞ்சம் கடினமான முடிவாகிவிட்டது. நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்தோம், மிகவும் வேதனைப்பட்டோம். இது ஒரு சூப்பர் சண்டே (Super Sunday), நாடே பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், எங்கள் மிடில் ஆர்டரில் ஏற்கனவே பிரச்சனை உள்ளது. அது உங்களுக்குத் தெரியும், எனக்கும் தெரியும், எங்கள் மிடில் ஆர்டரில் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ஒரு பிரச்சினை என்று நாங்கள் அனைவரும் தொடர்ந்து கூறி வருகிறோம்.

மேலும், நீங்கள் முகமது நவாஸிடம் அதிக ரன்களை எதிர்பார்க்கிறீர்கள், மீண்டும், ஷாஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் பஹீம் அஷ்ரஃப் ஆகியோர் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை வரும்போது அது கேள்விக்குரியதாகிறது. கீழ் வரிசை வீரர்கள் 50 ரன்கள் கூடுதலாகச் சேர்த்து, நாங்கள் 175 ரன்களை எட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் – இதில் மிகவும் அதிகமான தவறுகள், மிகவும் அதிகமான பிழைகள் உள்ளன.

கேப்டன்ஷிப் கேள்விக்குரியது. பந்துவீச்சு மாற்றங்கள் – பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்கச் சிரமப்படும்போது, அந்தச் சமயத்தில் ஹாரிஸ் ரவுஃபை கொண்டு வரத் தேவையில்லை; அவர் ஒரு ஓவரில் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார், அது தேவையில்லாதது" என்று அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.