விளையாட்டு

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் மருத்துவமனையில் அனுமதி.. உயிருக்கு போராடும் ஆஸ்திரேலிய நட்சத்திரம்! கண்ணீரில் ரசிகர்கள்!

அவரது துணைவி அமாண்டா மற்றும் குடும்பத்தினர் பலரது பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறார்கள்...

மாலை முரசு செய்தி குழு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டேமியன் மார்ட்டின் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 54 வயதான மார்ட்டின், கடந்த சில நாட்களாகவே உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு மெனிஞ்சைடிஸ் (Meningitis) எனப்படும் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் தீவிரத்தை முன்னிட்டு மருத்துவர்கள் அவரை 'இண்டூஸ்டு கோமா' (Induced Coma) எனப்படும் செயற்கை நினைவிழப்பு நிலைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துயரச் செய்தி கிரிக்கெட் உலகைத் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மார்ட்டினின் முன்னாள் சக வீரரான டேரன் லீமன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "டேமியன் மார்ட்டினுக்கு எங்களது அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்புகிறோம். மன உறுதியுடன் போராடுங்கள் லெஜண்ட். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். மார்ட்டினின் நெருங்கிய நண்பரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான ஆடம் கில்கிறிஸ்ட் இதுபற்றிக் கூறுகையில், "அவருக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது துணைவி அமாண்டா மற்றும் குடும்பத்தினர் பலரது பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன்பெர்க், மார்ட்டின் விரைவில் குணமடைய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். "டேமியனின் உடல்நிலை குறித்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்தின் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் அவருடன் உள்ளன" என்று அவர் கூறியுள்ளார். மார்ட்டின் தனது நேர்த்தியான பேட்டிங் முறைக்காகவும், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை லாவகமாகச் செலுத்தும் திறமைக்காகவும் உலகப்புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டார்வின் பகுதியில் பிறந்த மார்ட்டின், தனது 21-வது வயதில் 1992-93 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். தனது 23-வது வயதிலேயே மேற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற இவர், ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.37 என்ற சராசரியுடன் ரன்களைக் குவித்துள்ளார். இதில் 13 சதங்கள் அடங்கும். 2005 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக அவர் எடுத்த 165 ரன்களே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 2006-07 ஆஷஸ் தொடருக்குப் பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று வர்ணனையாளராகப் பணியாற்றி வந்தார்.

ஒருநாள் போட்டிகளிலும் மார்ட்டின் ஒரு சிறந்த வீரராகத் திகழ்ந்தார். 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 40.8 என்ற சராசரியைப் பெற்றுள்ள இவர், ஆஸ்திரேலியா 1999 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்றபோது அந்த அணியில் முக்கிய உறுப்பினராக இருந்தார். குறிப்பாக 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக உடைந்த விரலுடன் விளையாடி 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் 2006 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். தற்போது அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.