வங்கதேச மகளிர் கிரிக்கெட் உலகில், நீண்ட நாட்களாக நிலவி வந்த ஒரு பெரும் மன உளைச்சலுக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளரான ஜஹானாரா ஆலம், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினரான மன்ஜுருல் இஸ்லாம் மீது அவர் கடுமையான பாலியல் அத்துமீறல் புகார்களைச் சுமத்தியுள்ளார். மனநல பிரச்சனை காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கும் ஜஹானாரா, 2022ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின்போது, தேசிய அணியின் நிர்வாகத்தினரிடமிருந்து தனக்கு எப்படிப்பட்ட முறையற்ற வேண்டுகோள்கள் வந்தன என்பதை விரிவாகப் பேசியுள்ளார். இந்த அநாகரிகமான கோரிக்கைகளுக்கு ஜஹானாரா உடன்பட மறுத்ததால், மன்ஜுருல் இஸ்லாம் திட்டமிட்டுத் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்குத் தடையாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"இது ஒரு முறை அல்ல, பலமுறை நான் இதுபோன்ற முறையற்ற சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறேன். நாங்கள் அணியில் இருக்கும்போது, பல விஷயங்களைப் பற்றி நாம் பேச முடியாது. பேசுவதற்கு விரும்பினாலும், தயங்க வேண்டியிருக்கும். உங்களுக்கு வருமானம் கிரிக்கெட்தான், உங்களைச் சில பேருக்குத்தான் தெரியும் என்ற சூழ்நிலையில், நீங்கள் விரும்பினாலும் பல விஷயங்களை எதிர்த்துப் பேச முடியாது," என்று ஜஹானாரா, வியாழக்கிழமை அன்று ரியாசத் அசிமின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் கூறியுள்ளார்.
ஜஹானாரா இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச வாரியத்தின் பல மூத்த அதிகாரிகளிடன் சப்போர்ட் தேட முயற்சித்துள்ளார். வாரியத்தின் மகளிர் குழுத் தலைவரான நாடெல் சௌத்ரியும் தனது தொல்லைகளைத் தடுக்கத் தவறியதாக அவர் குற்றம் சாட்டினார். வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிஜாமுதீன் சௌத்ரி கூட, தான் பலமுறை கொடுத்த புகார்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
"2021-ல், பாபு பாய் (ஒருங்கிணைப்பாளர் சர்பராஸ் பாபு) மூலமாக தௌஹித் பாய் என்னை அணுகினார். இதைப் பற்றி நான் இதற்கு முன்பும் பலமுறை கூறியிருக்கிறேன். அவர்கள் ஏன் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அமைதியாக இருந்து, என் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த ரொம்பவே முயற்சி செய்தேன். ஆனால், நான் அந்தக் கோரிக்கையைச் சாமர்த்தியமாகத் தவிர்த்த அடுத்த நாளில் இருந்தே, மன்ஜு பாய் (மன்ஜுருல் இஸ்லாம்) என்னை அவமானப்படுத்தவும், இழிவுபடுத்தவும் தொடங்கினார்," என்று ஜஹானாரா அந்தக் காணொலியில் கூறியுள்ளார்.
"தௌஹித் பாய் என்னிடம் நேரடியாக ஒருபோதும் பேசவில்லை, அதற்குப் பதிலாக அவர் பாபு பாயை அனுப்பினார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நான் தலைமைச் செயல் அதிகாரிக்கு (CEO) ஒரு புகாராக இல்லாமல், 'கவனத்திற்குக் கொண்டுவரும் கடிதம்' (Observation Letter) ஒன்றைச் சமர்ப்பித்தேன். அதில் எல்லாவற்றையும் விளக்கினேன். பாபு பாய் என்னிடம், 'தௌஹித் சாரை நீ கவனித்துக் கொள்' என்று கூறினார். அதற்கு நான், 'அவர்தான் பொறுப்பில் இருக்கிறார், நான் அவரை என்ன கவனித்துக்கொள்வது?' என்று பதில் சொன்னேன். நான் வேண்டுமென்றே, அந்தக் கோரிக்கையைப் புரிந்துகொள்ளாதது போல் நடித்தேன். மற்ற பெண்களும் தங்களை இப்படிப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதற்காகவே இதை நான் இப்போது சொல்கிறேன். நான் தவிர்த்த அந்த நேரத்தில்தான் மன்ஜு பாயின் மோசமான நடத்தை ஆரம்பமானது."
"இரண்டாவது முறையற்ற கோரிக்கை, 2022 உலகக் கோப்பையின்போது மன்ஜு பாயிடமிருந்து வந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்த எல்லாவற்றையும் கிரிக்கெட் வாரியத்திடம் (BCB) தெரிவிக்க முடிவு செய்தேன். நான் நாடெல் சாரிடம் பலமுறை கூறினேன், அவர் தற்காலிகமாக ஏதோ ஒரு முடிவைச் சொல்வார், ஆனால் விரைவில் விஷயங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கே சென்றுவிடும். தலைமைச் செயல் அதிகாரிக்கும் தெரிவித்தேன்."
மன்ஜுருல் இஸ்லாமுக்கு, பெண் வீராங்கனைகளிடம் மிகவும் நெருக்கமாகப் பழகும் பழக்கம் இருந்ததாகவும் ஜஹானாரா வெளிப்படுத்தினார். அவருடைய இந்தப் பழக்கத்தால் பல பெண் கிரிக்கெட் வீரர்கள் அவரைத் தவிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
"எங்கள் பயிற்சி முகாமுக்கு முன்னால், நான் பந்துவீசிக் கொண்டிருந்தபோது, அவர் அருகில் வந்து என் தோளில் கை வைத்தார். பெண்களை அருகில் இழுத்து, மார்போடு அணைத்து, காதருகே குனிந்து பேசுவது அவருக்குப் பழக்கமான ஒன்று. நாங்கள் பொதுவாகவே அவரைத் தவிர்ப்போம், போட்டிக்குப் பிறகு கை குலுக்கும்போது கூட, அவர் எங்களை இழுக்க முடியாதபடி, தூரத்திலிருந்து கையை நீட்டிக் குலுக்குவோம். எங்களுக்கிடையே 'அவர் வருகிறார், மறுபடியும் கட்டிப்பிடிப்பார்' என்று பயத்துடன் ஜோக் அடித்துக் கொள்வோம்."
இந்நிலையில், மன்ஜுருல் இஸ்லாம் தனக்கு நேராக வந்து, மிகவும் சங்கடமான முறையில் தனது மாதவிடாய் சுழற்சி குறித்துக் கேட்ட ஒரு சம்பவத்தையும் ஜஹானாரா விவரித்தார்.
"ஒரு முறை அவர் என் அருகில் வந்து, என் கையைப் பிடித்து, தோள்மீது கைபோட்டு, என் காதருகே குனிந்து, 'உன் மாதவிடாய் எத்தனை நாளாக இருக்கிறது?' என்று கேட்டார். ஐ.சி.சி. விதிகளின்படி, உடலியல் நிபுணர்கள் (Physios) உடல்நலக் காரணங்களுக்காக வீராங்கனைகளின் சுழற்சிகளைக் கண்காணிப்பார்கள் என்பதால், அவருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஒரு நிர்வாகிக்கு அல்லது தேர்வாளருக்கு அந்தத் தகவல் ஏன் தேவை என்று எனக்குத் தெரியவில்லை. நான் 'ஐந்து நாள்' என்று சொன்னதும், அவர், 'ஐந்து நாளா? நேற்றே முடிந்திருக்க வேண்டும். உன் மாதவிடாய் முடிந்ததும் என்னிடம் சொல், நான் என் பக்கத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று பதில் சொன்னார். நான் அவரைப் பார்த்து, 'மன்னிக்கவும், அண்ணா, எனக்குப் புரியவில்லை' என்று மட்டும் சொன்னேன்."
க்ரிக்பஸ் (Cricbuzz) அறிக்கையின்படி, மன்ஜுருல் இஸ்லாம் இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். அவை ஆதாரமற்றவை என்றும், "நான் நல்லவனா கெட்டவனா என்று நீங்கள் மற்ற கிரிக்கெட் வீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்" என்றும் அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பாபு, ஜஹானாரா இந்தக் கதையை முழுவதும் உருவாக்கியதாகக் கூறியுள்ளார். "இறந்துபோன ஒருவரை அவர் இழுத்து வருவது துரதிர்ஷ்டவசமானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதற்குப் பதிலாக, அவர் நிரூபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றும் பாபு கூறினார்.
இந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB), ஜஹானாராவின் குற்றச்சாட்டுகளைக் கவனித்துள்ளது. "இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. எனவே, அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் அமர்ந்து விவாதிக்க வேண்டும். தேவைப்பட்டால், நிச்சயம் ஒரு விசாரணை நடத்தப்படும்," என்று வாரியத்தின் துணைத் தலைவரான ஷகாவத் ஹொசைன் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.