இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு தற்போது ஐபிஎல் வட்டாரத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை 9.20 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்திருந்தது. வங்கதேச வீரர் ஒருவருக்கு ஐபிஎல் வரலாற்றில் வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இருப்பினும், இந்த ஏலம் முடிந்த சில நாட்களிலேயே இது மிகப்பெரிய அரசியல் மற்றும் சமூக சர்ச்சையாக உருவெடுத்தது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழலைக் காரணம் காட்டி, பல அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பாஜக தலைவர்கள் ஷாருக்கானையும் கொல்கத்தா அணியையும் கடுமையாக விமர்சித்தனர். "இந்தியாவில் சாப்பிட்டுவிட்டு, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் நாட்டு வீரர்களுக்குக் கோடி கோடியாகப் பணம் கொடுப்பதா?" என்று பாஜக தலைவர் சங்கீத் சோம் போன்றவர்கள் ஷாருக்கானை 'துரோகி' என்று விமர்சிக்கும் அளவிற்கு நிலைமை தீவிரமடைந்தது.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் மௌனம் காத்த பிசிசிஐ, தற்போது நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கொல்கத்தா அணிக்கு ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, முஸ்தபிசுர் ரஹ்மானை உடனடியாக அணியிலிருந்து விடுவிக்குமாறு (Release) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளார். "சுற்றியுள்ள சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் முஸ்தபிசுர் ரஹ்மான் வரும் 2026 ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. விளையாட்டுடன் அரசியலைக் கலக்கக் கூடாது என்று ஒரு தரப்பினர் வாதிட்டாலும், அண்டை நாட்டின் சூழல் மற்றும் தேசிய உணர்வைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவை மற்றொரு தரப்பினர் வரவேற்கின்றனர். கொல்கத்தா அணி முஸ்தபிசுர் ரஹ்மானுக்குப் பதிலாக வேறொரு வெளிநாட்டு வீரரைத் தனது அணியில் சேர்த்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே எழுந்துள்ள இந்த விவகாரம், வரும் காலங்களில் இந்தியா-வங்கதேச கிரிக்கெட் உறவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.