அர்ஷ்தீப் சிங் அர்ஷ்தீப் சிங்
விளையாட்டு

மைதானத்தில் வீடியோ எடுத்த முன்னாள் வீரர்: பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு - சட்ட ரீதியான நடவடிக்கை பாய்கிறது!

"ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது மைதானத்தில் இருந்தபடி வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம்" என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாலை முரசு செய்தி குழு

ஐபிஎல் 2026 தொடரில் ஊழல் தடுப்பு விதிகளை மிகவும் கடுமையாக்கியுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தற்போது அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் இனி பிசிசிஐ-யின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். பிசிசிஐ அல்லது ஐபிஎல் அணிகளுடன் தொடர்புடைய எவரும் மைதானத்திற்குள் வீடியோக்கள் எடுக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சமூக வலைதளங்களுக்காக வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளின் போது, வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் இருக்கும் பகுதிக்கு (PMOA) அருகே சிலர் வீடியோ எடுத்ததைக் கவனித்த பிசிசிஐ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, முன்னாள் சர்வதேச வீரர் ஒருவர் போட்டியின் ஒரு பரபரப்பான கட்டத்தில் மைதானத்தின் டக்-அவுட் பகுதிக்கு அருகே நின்று தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிசிசிஐ அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு அந்தப் பதிவை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது யூடியூப் சேனலுக்காக மைதானத்தில் வீடியோ பதிவு செய்ததைக் கண்டறிந்த பிசிசிஐ, அவருக்குச் சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பத் தயாராகி வருகிறது. பிசிசிஐ அல்லது ஐபிஎல் அதிகாரப்பூர்வ சீருடையை அணிந்திருக்கும் எவரும் மைதானத்திற்குள் வீடியோக்களைப் பதிவு செய்யக் கூடாது என்பதில் வாரியம் மிகவும் உறுதியாக உள்ளது. விளையாட்டுத் துறையில் அதிகரித்து வரும் இந்த 'ரீல்ஸ்' கலாச்சாரம் மற்றும் சமூக வலைதள மோகம் குறித்து பிசிசிஐ தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இது தொடர்பாகக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. "ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது மைதானத்தில் இருந்தபடி வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம்" என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அண்மையில் விமானத்தில் பயணித்த போது யுஸ்வேந்திர சாகல் மின்-சிகரெட் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் 'வீடியோ பிளாக்கிங்' செய்வதை நிறுத்த வேண்டும் என்று பிசிசிஐ ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.