Ruturaj Gaikwad  
விளையாட்டு

சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணம்! ஒப்புக்கொண்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - சரி பாஸ்.. இதற்கு தீர்வு என்ன?

விக்கெட்டுகளை எடுக்கத் தவறியது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது...

மாலை முரசு செய்தி குழு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி குறித்துப் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பந்துவீச்சாளர்களின் சுமாரான செயல்பாடே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 209 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்த போதிலும், அணியில் இருந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களால் எதிரணியைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, இளம் வீரர் ஆயுஷ் மத்ரேயின் அதிரடியான 73 ரன்கள் உதவியுடன் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. ஆனால், இந்த இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். பஞ்சாப் பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த சிஎஸ்கே பௌலர்கள் திணறியதால், 18.4 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி இலக்கை எட்டிப் பிடித்து அசத்தியது. குறிப்பாக பவர் பிளேவுக்குப் பிறகு மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கத் தவறியது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

போட்டிக்குப் பிறகு பேசிய ருதுராஜ் கெய்க்வாட், அணியில் பேலன்ஸான பந்துவீச்சு அட்டாக் இருந்தும் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை என்று கூறினார். குறிப்பாக, பவர் பிளேவுக்குப் பிறகு இரண்டு Wrist Spinners நம்பித் தான் அட்டாக் செய்தோம் என்றும், ஆனால் அன்று அவர்களுக்கு ஒரு மோசமான நாளாக அமைந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். சில நேரங்களில் பந்துவீச்சு நன்றாக இருந்தாலும், முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறியதுதான் தோல்விக்கு விலையாக அமைந்துவிட்டது என்று அவர் ஓப்பனாகத் தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 11 ரன்கள் என்ற அளவில் இருந்தது. அந்தச் சமயத்தில் ஓரிரு ஓவர்களைச் சிக்கனமாக வீசியிருந்தால் தேவையான ரன் ரேட் 13 அல்லது 14 ஆக உயர்ந்திருக்கும் என்று ருதுராஜ் சுட்டிக்காட்டினார். ஆனால், பந்துவீச்சில் தங்களுக்குத் தேவையான அந்த மொமண்டம் (Momentum) கிடைக்கவில்லை என்றும், மிடில் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது என்றும் அவர் கூறினார். இந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்வது சற்று கடினமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த ஆட்டத்தில் சில பாசிட்டிவான விஷயங்களும் இருந்ததாக ருதுராஜ் குறிப்பிட்டார். குறிப்பாக இளம் வீரர் ஆயுஷ் மத்ரே மற்றும் சிவம் துபே ஆகியோரின் சிறப்பான பேட்டிங் அணிக்கு பலம் சேர்த்ததாக அவர் பாராட்டினார். பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும், பந்துவீச்சு பிரிவில் உடனடியாக மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க வேண்டுமென்றால், பந்துவீச்சாளர்கள் தங்களின் ஃபார்முக்குத் திரும்ப வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

வெற்றி பெற்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது, தொடக்க வீரர்கள் கொடுத்த அதிரடியான ஸ்டார்ட் தான் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று கூறினார். பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரின் அபாரமான ஆட்டம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அதிக கான்ஃபிடன்ஸ் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். இக்கட்டான சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் வீரர்கள் தெளிவாக இருந்ததாகவும், இந்த வெற்றி அணிக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.