ஐபிஎல் 2026 தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'எல் கிளாசிகோ' (El Clasico) ஆட்டம் இன்று வியாழக்கிழமை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. தலா ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்த இரண்டு ஜாம்பவான் அணிகளும் மோதும் இந்தப் போட்டிக்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரு அணிகளுமே இந்த சீசனில் இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதல் பாதி இடங்களுக்கு முன்னேறும் என்பதால், இது இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது.
இருப்பினும், இந்த முறை 'எல் கிளாசிகோ' போட்டிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சிஎஸ்கே-வின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஆகிய இருவருமே இன்றைய போட்டியில் விளையாடுவார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ரோகித் சர்மா Hamstring issue காரணமாகக் கடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோல், தோனி தொடர் தொடங்குவதற்கு முன்பே தசைநார் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட அவர் களம் காணவில்லை. இந்த இரண்டு ஜாம்பவான்களும் இல்லாமல் ஒரு மும்பை - சென்னை போட்டியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கிரிக்பஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, செவ்வாய்க்கிழமை அன்று தோனி மற்றும் ரோகித் ஆகிய இருவருமே பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இருவருமே தங்களது முழுமையான உடற்தகுதி குறித்து இன்னும் திருப்தியடையவில்லை என்று கூறப்படுகிறது. ரோகித் சர்மா செவ்வாய்க்கிழமை மாலை பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டாலும், போட்டிக்குத் தேவையான முழு உடல் தகுதியை அவர் இன்னும் எட்டவில்லை என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு கட்டத்தில் விளையாடுவது குறித்து ரோகித்தே முடிவெடுப்பார் என்று சொல்லப்பட்டாலும், புதன்கிழமை நிலவரப்படி அவர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தோனியின் நிலை குறித்துப் பேசுகையில், "தோனி எப்போது தயாராக இருக்கிறாரோ அப்போது எங்களிடம் தெரிவிக்கச் சொல்லியிருக்கிறோம். இன்று வரை அவர் விளையாடுவது குறித்து எங்களிடம் எதுவுமே சொல்லவில்லை. அவரது தகவலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர் இன்று மைதானத்திற்கு வருவாரா என்பதே எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அவர் விளையாடுவது என்பது முழுமையாக அவரது விருப்பத்தைப் பொறுத்தது" என்று தெரிவித்துள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர். தோனி விளையாடவில்லை என்றால் அது சென்னை அணிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய போட்டியில் ரோகித் மற்றும் தோனி விளையாடாவிட்டால், அது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு வினோதமான 'எல் கிளாசிகோ'வாக இருக்கும். இரு அணிகளுமே புதிய கேப்டன்களின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில், இந்த அனுபவம் வாய்ந்த வீரர்களின் வழிகாட்டுதல் மைதானத்தில் மிகவும் அவசியம். ரோகித் சர்மா இல்லாமல் மும்பை அணியின் பேட்டிங் வரிசையும், தோனி இல்லாமல் சென்னை அணியின் ஃபினிஷிங் மற்றும் விக்கெட் கீப்பிங் வியூகங்களும் பலவீனமடைய வாய்ப்புள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.