2026 ஐபிஎல் சீசன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. அதை தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர் லுங்கி இங்கிடி, பீல்டிங் களத்தில் நின்ற போது தலையில் பலத்த காயமடைந்தார். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 265 ரன்கள் எனும் இலக்கை வைத்தது. அதை தொடர்ந்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா, அக்சர் பட்டேல் வீசிய பந்தை வானில் உயரமாக அடித்தார். லுங்கி இங்கிடி பின்னோக்கி நகர்ந்து பந்தை பிடிக்க முயன்ற போது, கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தரையில் விழுந்தபோது, அவரது தலையின் பின்பகுதி வேகமாக மோதியதின் காரணமாக இந்த பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. மேலும் பல்டி அடித்தபடி விழுந்ததில் பின் பக்கத்தில் பலத்த அடிபட்டது. பிசியோதெரபிஸ்ட் அந்த வீரரைப் பரிசோதித்தார். அவரது உடலில் எந்த அசைவும் இல்லாதது பெரும் அச்சதை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு மருத்துவ உதவி அளிக்க விரைவாக மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தது, இதையடுத்து லுங்கி இங்கிடி ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த ஐபிஎல் சீசனில் இப்படி நடப்பது இதுவே முதல் முறையாகும். அதனையடுத்து மாற்று வீரராக இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா களமிறங்கியுள்ளார்.
தற்போது லுங்கி இங்கிடி மருத்துவக் குழுவிடம் பேசியதாகவும் மேலும், அவர் சுயநினைவுடன் உள்ளதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளது. எனவே, கவலை கொள்ளும் அளவுக்கு இங்கிடிக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என தெரிகிறது. இந்த சூழலின் காரணம் சுமார் 15-20 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.