விளையாட்டு

முதல்முறையாக நேருக்கு நேர்... இந்தியா - ஜப்பான் T20 மோதல்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) உறுப்பு நாடாகச் செயல்பட்டு வரும் ஜப்பான் ஏற்கனவே சர்வதேச விளையாட்டுகளில் களம் கண்டுள்ளது.

மாலை முரசு செய்தி குழு

இந்தியா-ஜப்பான் மோதும் T20 கிரிக்கெட் போட்டி பல்சுவைமிக்க கலாச்சார உறவைக் கொண்ட இந்தியாவும் ஜப்பானும் தங்களுக்கிடையேயான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, வரலாற்றிலேயே முதல்முறையாக T20 கிரிக்கெட் போட்டி தொடரில் மோதவுள்ளன..

புத்தரின் போதனைகள் மூலம் நூற்றாண்டுகளாக தொடரும் இந்தியா-ஜப்பான் உறவு பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு என அனைத்துத் துறைகளிலும் வலுவான ஆலமரமாக வளர்ந்து வரும் நிலையில், சுசூகி கோப்பை' T20 கிரிக்கெட் போட்டி மூலம் விளையாட்டு துறையில் இருநாடுகளும் இணைந்து புதிய வரலாற்றை படைக்கவுள்ளன.

2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தைக் கருத்தில் கொண்டு, ஜப்பானிய பிரதமர் சானே டகாய்ச்சி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையேயான உச்சி மாநாட்டில் இந்த விளையாட்டு ஒப்பந்தம் எட்டப்பட்டது.

அதன் அடிப்படையில் 'ஸ்போர்ட் 75' என்ற முன்னெடுப்பின் முதல் படியாக இந்தப் போட்டி வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை சந்திக்கவுள்ளது.

டோக்கியோவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணியும், கெண்டல் கடோவாகி-பிளெமிங் (Kendel Kadowaki-Fleming) தலைமையிலான ஜப்பான் அணியும் நேருக்கு நேர் முதல்முறையாக சந்திக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் கலாச்சார உறவை வலுப்படுத்தும் வகையில், ஆட்டோமொபைல் துறையில் ஜப்பானின் பெருமைமிகு அடையாளமான 'சுசூகி' நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இணைந்ததைத் தொடர்ந்து, சானோ கிரிக்கெட் மைதானத்தில் இருக்கைகளின் எண்ணிக்கை 500-லிருந்து 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகப் புகழ்பெற்ற இந்திய அணியுடன் தனது நாட்டு அணி விளையாடுவதை நேரில் காணும் ஆர்வம் காரணமாக, டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்தும் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டன.

ஜப்பானில் பிரபலமான பேஸ்பால் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு மத்தியில், கிரிக்கெட் போட்டிக்காக ரசிகர்கள் இவ்வளவு திரண்டு வருவது இதுவே முதல்முறை என்பதால், இப்போட்டி அங்கு பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) உறுப்பு நாடாகச் செயல்பட்டு வரும் ஜப்பான் ஏற்கனவே சர்வதேச விளையாட்டுகளில் களம் கண்டுள்ளது. ஐசிசி கிழக்கு ஆசியா-பசிபிக் தகுதிச்சுற்றுப் போட்டி போன்றவற்றில் அவர்கள் பாராட்டத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி, பலமான அணிகளை அவற்றின் உச்சகட்டத்திற்குத் தள்ளியுள்ளனர்..

இந்நிலையில் இந்தியா போன்ற அசாத்திய பலம் வாய்ந்த உலகச் சாம்பியன் அணியை ஜப்பான் எதிர்கொள்வது, அங்கு கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தவும், கிழக்கு ஆசியாவில் புதிய ரசிகர்களை உருவாக்கவும் ஒரு பெரும் திருப்புமுனையாக அமையும் என ஜப்பான் கிரிக்கெட் வாரியம் (JCA) தெரிவித்துள்ளது.

உலகின் பலம் வாய்ந்த அணியான இந்தியாவுடன், ஜப்பான் அணி டி20 கிரிக்கெட் போட்டியில் அதிகாரப்பூர்வமாக மோதுவது இதுவே முதல்முறை என்பதால், உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் சானோ மைதானத்தை நோக்கித் திரும்பியுள்ளது.

மவுரியப் பேரரசர் அசோகர் காலத்தில் ஜப்பான் நாட்டில் வேரூன்றிய பவுத்தம் இரு நாடுகளிடையே ஆன்மீக ஆன்ம பந்தத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று சானோ கிரிக்கெட் மைதானத்தில் 'சுசூகி கோப்பை' மூலமாக ஒரு புதிய உலகச் சரித்திரம் படைக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்