இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, அண்மையில் இங்கிலாந்து தொடர் மற்றும் ஆசியக் கோப்பைக்கான அணியில் இடம்பெறாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தனது உடல் தகுதி குறித்து எழுந்த சந்தேகங்கள், தேர்வாளர்களின் அணுகுமுறை மற்றும் அணித் தேர்வு குறித்த தனது கருத்துக்கள் ஆகியவற்றுக்கு அவர் ஒரு அதிரடியான பதிலைக் கொடுத்துள்ளார்.
அணியில் இடம்பெறாததற்கான காரணம் என்ன?
முகமது ஷமி, கடைசியாக மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில்தான் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசியக் கோப்பை அணியிலும் அவர் இடம்பெறவில்லை. இதற்கு முக்கியக் காரணம், அவரது உடல் தகுதிக் குறைபாடுதான் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை ஷமி நேரடியாக மறுத்துள்ளார்.
ஷமி கூறியது என்ன?
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னரும் இதேதான் நடந்தது. தொடருக்கு முன், நான் சற்று அசௌகரியமாக உணர்ந்தேன். ஒரு வீரர், அணி எதிர்பார்க்கும் அளவுக்குத் தகுதியாக இல்லை என்றால், அவர் பின்வாங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்," என்று ஷமி கூறினார்.
தேர்வு செய்வது உங்கள் கையில்
ஆசியக் கோப்பைக்கான அணியில் அவர் ஏன் இடம்பெறவில்லை என்று கேட்டபோது, "நான் யாருடைய மீதும் குற்றம் சொல்லவில்லை, அல்லது புகார் கூறவும் இல்லை. தேர்வாளர்கள் என்னிடம் பேச வேண்டும் அல்லது பேசக்கூடாது என்று நான் சொல்லவில்லை. எனக்கு அதைப் பற்றி அவ்வளவாகக் கவலை இல்லை. நான் உங்கள் திட்டங்களுக்கு ஏற்றவனாக இருந்தால், என்னை அணியில் சேருங்கள். இல்லையென்றால், என்னை வேண்டாம் என்று ஒதுக்குங்கள். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. உங்கள் கடமைகளை நீங்கள் நிறைவேற்றுங்கள், நாட்டிற்கு எது சிறந்ததோ அதைச் செய்யுங்கள். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நான் நம்புகிறேன்" என்று ஷமி வெளிப்படையாகப் பேசினார்.
துலீப் டிராபி மற்றும் உடற்தகுதி:
அணியில் மீண்டும் திரும்புவது எப்போது என்று கேட்டபோது, ஷமி, “நான் கடினமாக உழைத்து வருகிறேன். என்னால் துலீப் டிராபி போட்டிகளில் விளையாட முடிந்தால், நிச்சயமாக என்னால் டி20 போட்டிகளிலும் விளையாட முடியும்” என்றார்.
"எனக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. எனது திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால், எனது முழு உழைப்பையும் கொடுப்பேன். தேர்வு என் கையில் இல்லை. என்னால் அனைத்து வடிவங்களிலும் விளையாட முடியும். துலீப் டிராபியில் நான் ஐந்து நாட்கள் விளையாட முடிந்தால், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியுமா என்பது குறித்து எந்த விவாதமும் இருக்கக்கூடாது" என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.