இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஒருவர், தற்போதைய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உடனடியாக தனது கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஓர் அதிர்ச்சிகரமான பரிந்துரையை முன்வைத்துள்ளார். இந்தியக் கிரிக்கெட்டின் நீண்ட கால நலன் கருதியே இந்தப் பரிந்துரையைச் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முக்கியமான கருத்தை முன்வைத்தவர், இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி. இவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தனது கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவது, அவருக்கு மட்டுமல்லாமல், இந்திய அணிக்கும் நன்மை பயக்கும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வெற்றிக்குப் பிறகு இப்படி ஒரு கருத்தைச் சொல்வது சற்று கடுமையானதாகத் தோன்றலாம், ஆனால் இது காலத்தின் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹர்மன்பிரீத் கவுர் ஒரு துணிச்சலான பேட்டராகவும், மிகச் சிறந்த ஃபீல்டராகவும் அணியில் மிகவும் மதிப்புமிக்கவராக இருக்கிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கேப்டன் என்ற பொறுப்பின் சுமை இல்லாமல் அவர் விளையாடினால், தனது ஆட்டத்தில் அவர் இன்னும் அதிகப் பங்களிப்பை வழங்க முடியும் என்று ரங்கசாமி நம்புகிறார். சில நேரங்களில், ஹர்மன்பிரீத் கவுரின் ஸ்டிராடஜி இல்லாத முடிவுகள் அணிக்குச் சறுக்கலை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி, இந்திய அணியின் எதிர்காலத்தை மனதில் கொண்டே இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை 2029 ஆம் ஆண்டிலும், டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டிலும் வரவிருக்கும் நிலையில், இப்போதே தலைமைப் பொறுப்பில் மாற்றம் கொண்டு வருவது அவசியம். முப்பத்தி ஆறு வயதாகும் ஹர்மன்பிரீத் கவுர், கேப்டன் பொறுப்பு இல்லாமல் இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குச் சிறப்பாக விளையாட முடியும் என்றும், அந்தச் சமயத்தில் ஒரு அனுபவம் வாய்ந்த வீரராக அணியில் அவர் இருப்பது அவசியம் என்றும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
ஹர்மன்பிரீத் கவுருக்குப் பதிலாக, நட்சத்திர தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவை அனைத்து வடிவப் போட்டிகளுக்கும் புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் சாந்தா ரங்கசாமி பரிந்துரைத்துள்ளார். இருபத்தி ஒன்பது வயதான ஸ்மிருதி மந்தனா கேப்டன் பொறுப்பை ஏற்று, பல வருடங்களுக்கு அணியை வழிநடத்தும் திறன் கொண்டவர் என்றும் அவர் கூறியுள்ளார். ஆண்கள் அணியில் கூட, சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கேப்டன் ரோகித் சர்மாவைத் தேர்வுக் குழுவினர் அணியின் நலனுக்காக மாற்றுவது பற்றி பரிசீலித்ததை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கோப்பையை வென்றது இந்தியக் கிரிக்கெட்டிற்கு ஒரு மாபெரும் தருணம் என்றாலும், அணியில் இன்னும் சில பலவீனமான இடங்கள் இருப்பதாகவும் ரங்கசாமி குறிப்பிட்டார். குறிப்பாக, இந்திய அணியின் பந்து வீச்சில் இன்னும் முன்னேற்றம் தேவை என்றும், ஆஸ்திரேலியா போன்ற அணிகளைப் போல ஆதிக்கம் செலுத்த பந்துவீச்சுப் பிரிவை பலப்படுத்த வேண்டும். அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோற்க ஒரே காரணம் அவர்களது பந்து வீச்சுப் பிரிவு வலிமையில்லாமல் இருந்ததே ஆகும். பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளின் பவுலிங் கூட நன்றாக இருந்தது. ஆஸி.,யின் பவுலிங் சுமாராக இருந்ததே அவர்களது தோல்விக்கு காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.