kkr rinku singh 
விளையாட்டு

ரிங்கு சிங்கிற்கு பேட்டிங் செய்யவே தெரியாதா? 5 சிக்ஸர்கள் அடிச்சது எல்லாம் அப்போ.. இப்போ, ம்ஹூம்! - விளாசிய முன்னாள் வீரர்

ரன் ரேட் 10 அல்லது 12-க்கு மேல் தேவைப்படும்போது அவரால் பெரிய ஷாட்டுகளை அடிக்க முடிவதில்லை...

மாலை முரசு செய்தி குழு

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் பந்துவீச்சாளர்கள் வரை யாருமே சரியாகச் செயல்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாக உள்ளது. குறிப்பாக, கேமரூன் கிரீன் மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்ற சீனியர் வீரர்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரிங்கு சிங்கின் தற்போதைய ஃபார்ம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 1983 உலகக்கோப்பை நாயகன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரிங்கு சிங்கின் திறமை குறித்துப் பகிரங்கமான கேள்விகளை எழுப்பி அனலைக் கிளப்பியுள்ளார்.

ரிங்கு சிங் ஒரு அதிரடி ஆட்டக்காரரே கிடையாது என்று ஸ்ரீகாந்த் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ரிங்கு சிங் ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் அடித்தது எல்லாம் எப்போதோ நடந்த ஒரு விஷயம். அதையே நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பேசிக்கொண்டிருக்கப் போகிறோம்? அவர் சிங்கிள்ஸ் எடுத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதற்கு வேண்டுமானால் லாயக்காக இருக்கலாம். ஆனால், ரன் ரேட் 10 அல்லது 12-க்கு மேல் தேவைப்படும்போது அவரால் பெரிய ஷாட்டுகளை அடிக்க முடிவதில்லை. ரிங்கு சிங்கிற்கு ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்யும் அளவுக்குத் தகுதி இல்லை" என்று தனது யூடியூப் சேனலில் நேரடியாகக் கூறியுள்ளார்.

மேலும் ரிங்கு சிங்கின் பேட்டிங் வரிசை குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், அவரை ஏழாம் இடத்தில் களம் இறக்குவதுதான் சரியாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். ஐந்து ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்படும்போது ஒரு பினிஷராக அவர் விளையாடலாமே தவிர, ஐந்தாம் இடத்தில் வந்து இன்னிங்ஸைக் கட்டமைக்கும் பொறுப்பை அவரிடம் கொடுப்பது கொல்கத்தா அணிக்கு வேலை செய்யாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய தேசிய அணியிலும் ரிங்கு சிங் இதே பினிஷர் ரோலில் தான் விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையையும் ஸ்ரீகாந்த் கடுமையாகச் சாடியுள்ளார். அங்க்ரிஷ் ரகுவன்ஷியைத் தவிர அந்த அணியில் இருக்கும் எந்த ஒரு பேட்டரிடமும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆர்வம் துளியும் இல்லை என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஃபின் ஆலன் போன்ற வீரர்கள் ஏதோ கண்ணை மூடிக்கொண்டு பேட்டைச் சுழற்றுவதாகவும், தான் விளையாடிய காலத்தை விட மோசமாக அவர்கள் பேட்டிங் செய்வதாகவும் கிண்டல் செய்துள்ளார்.

தொடர்ந்து சொதப்பி வரும் ஃபின் ஆலனுக்கு இதுதான் கடைசிப் போட்டியாக இருக்கும் என்றும், அவருக்குப் பதிலாக டிம் சைஃபர்ட் அணிக்குள் வருவார் என்றும் ஸ்ரீகாந்த் கணித்துள்ளார். ஒரே மாதிரியான ஷாட்டுகளை ஆடி அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டமிழக்கும் வீரர்களால் அணிக்கு எந்தப் பயனும் இல்லை என்பதே ஸ்ரீகாந்தின் வாதமாக உள்ளது. ரிங்கு சிங் போன்ற ஒரு இளம் வீரரைப் பற்றி ஸ்ரீகாந்த் இவ்வளவு வெளிப்படையாகப் பேசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.