இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் தற்போது பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், தனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு ஒரு சிறந்த சவால் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் அவர் கூறிய ஒரு கருத்து தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. "நான் என்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. நான் எப்படிப் பழையதோ, அதே நபராகவே இருக்க விரும்புகிறேன். இன்னொருவரின் நிழலில் இருக்க நான் விரும்பவில்லை" என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த சில காலங்களில் டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஆனால், அவரது தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் மற்றும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான செயல்பாடு ஆகியவை விமர்சனங்களுக்கு உள்ளாகின. இந்தச் சூழலில், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளைச் சிறப்பாக வழிநடத்திய ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமைத்துவத்தைப் பாராட்டி, அவருக்கு அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அஜித அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு, இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றத்தைச் செய்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த "நிழல்" குறித்த கருத்து, கடந்த கால நிகழ்வுகளைக் குறிப்பதாகப் பேசப்படுகிறது. ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றபோது, அதற்கு உண்மையான காரணம் கௌதம் கம்பீர் என்று பலரும் பேசினர். ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமைப் பங்களிப்பை விட, மெண்டார் கம்பீரின் திட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தற்போது, இந்திய டி20 அணியின் பயிற்சியாளராக மீண்டும் கம்பீரும், கேப்டனாக ஷ்ரேயாஸும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்தச் சூழலில், "யாருடைய நிழலிலும் இருக்க விரும்பவில்லை" என்று ஷ்ரேயாஸ் கூறியிருப்பது, தான் ஒரு சுதந்திரமான கேப்டனாகச் செயல்பட விரும்புகிறார் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்