கடந்த 18 ஆண்டுகளாகத் தவம் கிடந்த விராட் கோலியின் ஐபிஎல் கனவு நனவாகியுள்ளது. தனது 37-வது வயதிலும் இளைஞர்களுக்கு இணையாக அசத்தி வரும் கோலி, ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றியை உறுதி செய்யும் ரன்னை அடித்து, தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்தத் தொடர் முழுவதும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 75 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டத்திற்குப் பிறகு பேசிய கோலி, வெற்றியைத் தீர்மானிக்கும் ரன்னை அடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், அந்தத் தருணம் இப்போது அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் கூறினார்.
தனது 25 பந்துகளில் அரைசதம் அடித்தது குறித்துப் பேசிய கோலி, தான் இன்னும் கிரிக்கெட் விளையாட்டைக் கற்றுக்கொள்ளும் மாணவனாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, வைபவ் சூர்யவன்ஷி பெயரை குறிப்பிடாமல் இளம் வீரர்கள் காட்டும் வேகம், தன்னைத் தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ளத் தூண்டுகிறது என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார். தான் தனது ஆட்டத்தின் அடிப்படை நுணுக்கங்களை மாற்றவில்லை என்றாலும், மைதானத்தில் பந்துவீச்சாளர்களைத் தாக்கி அதிக ரன்களைக் குவிக்க வேண்டும் என்ற மனநிலையை மாற்றி அமைத்ததாக அவர் தெரிவித்தார். இளம் வீரர்களின் வருகை, மூத்த வீரர்களையும் அப்டேட்டாக இருக்கத் தூண்டுகிறது என்பதை இது உணர்த்தியது.
இந்த சீசனில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு ஒரு தனிப்பட்ட வீரர் மட்டும் காரணமல்ல என்பதுதான் கோலிக்கு மிகுந்த திருப்தியைத் தந்துள்ள விஷயம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பொறுப்பேற்று விளையாடியதுதான் இந்த வெற்றிக்கான அடிப்படை. ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, க்ருனால் பாண்டியா மற்றும் ரசிக் தார் எனத் திறமையான பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தது கூடுதல் பலம் அளித்தது. ஆர்சிபி நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கியுள்ள இந்த வலுவான அணியே, எந்தச் சூழ்நிலையிலும் வெற்றி பெறும் நம்பிக்கையைத் தருகிறது என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
எந்த அணிக்கு எதிராகவும் தேவையில்லாமல் விமர்சனங்களை முன்வைக்காமல், மிகுந்த மரியாதையுடன் விளையாடுவது ஆர்சிபியின் தனித்துவம் என்று கோலி தெரிவித்தார். நாங்கள் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதிலேயே குறியாக இருந்தோம், எதிரணியினர் யார் என்பது முக்கியமல்ல என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு முதல்முறை கோப்பை வென்றபோது, பயிற்சியாளர் மோ பாபட் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்ந்த கோலி, இந்த வெற்றி அதன் தொடர்ச்சிதான் என்றும், இந்த முறை அணியின் சமநிலையும் பலமும் அபாரமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இறுதிப் போட்டி அழுத்தமில்லாமல் இருந்ததாகக் கோலி தெரிவித்தார். அணி வீரர்களின் திறன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது. திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினால் எங்களை விடச் சிறந்த அணி எதுவுமில்லை என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். தொடரின் இடையில் சில போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றி மீண்டும் நம்பிக்கை அளித்தது. இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் சொந்த மைதானத்தில் விளையாடிய போதிலும், 90 சதவீத ரசிகர்கள் ஆர்சிபிக்கு ஆதரவாக இருந்தது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஊக்கம் என்றும், அந்த ஆதரவிற்குக் கோலி தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.