ஐபிஎல் 2026 சீசனில் தேவையற்ற சர்ச்சைகளையும், பாலியல் புகார்களையும் தவிர்க்க பிசிசிஐ (BCCI) அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக 10 அணிகளுக்கும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா 7 பக்கங்கள் கொண்ட எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில், முக்கியமாக வீரர்கள் 'ஹனி-டிராப்' (Honey-trap) வலையில் சிக்காமல் இருக்கவும், பாலியல் ரீதியான சட்டச் சிக்கல்களில் சிக்காமல் இருக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை விதிகளை யாராவது மீறினால், சம்பந்தப்பட்ட வீரரை சஸ்பெண்ட் செய்யவும் அல்லது பெரிய அளவில் அபராதம் விதிக்கவும் பிசிசிஐ தயங்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைகளில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஆபரேஷன்ஸ் குழுவினர் எப்போது வேண்டுமானாலும் திடீர் சோதனைகளை (Surprise Checks) நடத்துவார்கள் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீரர்களோ அல்லது அதிகாரிகளோ ஹோட்டலுக்கு வெளியே தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ சென்றால், முன்கூட்டியே செக்யூரிட்டி அதிகாரிகள் மற்றும் டீம் மேனேஜரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் வெளியே செல்வதும், மேனேஜருக்குத் தெரியாமல் யாரையும் அறைக்குள் அனுமதிப்பதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் என்று தேவஜித் சய்கியா தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் அறைகளுக்குள் வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் பிசிசிஐ மிகத் தீவிரமாக உள்ளது. வீரர்கள் அல்லது அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், டீம் மேனேஜரின் முறையான ஒப்புதல் இல்லாமல் யாரும் அறைக்குள் நுழைய அனுமதி இல்லை. ஒவ்வொரு அணி மேனேஜரும் தங்கள் வீரர்களைச் சந்திக்க வரும் விருந்தினர்களின் விவரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். ஏதேனும் விதிமீறல்கள் நடந்தால், அதை உடனடியாக ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் வீரர்கள் அல்லது அணிகளுக்கு எதிராக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது, நிதி அபராதம் விதிப்பது, போட்டிகளில் விளையாட தடை விதிப்பது அல்லது தகுதி நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க பிசிசிஐ-க்கு முழு அதிகாரம் உள்ளது. ஐபிஎல் தொடரின் கண்ணியத்தைக் காக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், போட்டிகளின் போது டக்-அவுட் (Dugout) பகுதியில் இருக்கும் வீரர்கள் அல்லது மேனேஜர்களுடன் அணி உரிமையாளர்கள் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் பிசிசிஐ கூடுதல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.