``சாதனைகளும் அதிரடியும் அல்ல.. இதுதான் தோனி!" - கடைசி பந்து வரை தோல்வி முடிவாக்காது.. டாப் 10 இன்னிங்ஸ் ஒரு விசிட்!  CSK
விளையாட்டு

``சாதனைகளும் அதிரடியும் அல்ல.. இதுதான் தோனி!" - கடைசி பந்து வரை தோல்வி முடிவாகாது.. டாப் 10 இன்னிங்ஸ் ஒரு விசிட்!

இன்றைய வீரர்கள் 10 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடித்தாலும், தோனியின் விளையாட்டு நமக்கு நினைவிருப்பது முற்றிலும் வேறான காரணத்தால்.

Antony Ajay R

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அணிக்கு கிடைத்த அரிதான ரத்தினம் தோனி. ஒரு சிறந்த கேப்டனாகவும் சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த கீப்பராகவும் தன்னை ஆழமாக நிலைநிறுத்திக்கொண்டவர்.

அதே நேரத்தில் தனது பேச்சாலும் நடத்தையாலும் ரசிகர்களின் மனதை வென்றவர். எந்த ஒரு சூழலையும் கடந்து வெற்றியை அடையமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர், எந்த நிலையிலும் பதட்டம் அடையாமல் டென்ஷன் ஆகாமல் கேப்டன் கூலாக நிலைத்திருந்தவர்.

தோனி இன்று ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008 ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் தோனி, ரசிகர்களுடன் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளார். அணியை 5 முறை ஐபிஎல் கோப்பைக்கு வழிநடத்தியுள்ளார்.

Dhoni

இன்றைய வீரர்கள் 10 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடித்தாலும், தோனியின் விளையாட்டு நமக்கு நினைவிருப்பது முற்றிலும் வேறான காரணத்தால். போட்டி கையைவிட்டு போனது, இனி வெற்றி பெற வழி இல்லை என தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கும் ரசிகரின் நம்பிக்கையை கட்டி எழுப்பும் அவரது பேட்டில் இருந்து பறக்கும் சிக்சர்.

அணி எந்த நிலையில் இருந்தாலும், போட்டி 99% எதிரணிக்கு சாதகமாக இருந்தாலும் கேப்டன் தோனி இருக்கும் வரை போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கைதான் அவரை ஹீரோவாக உருவாக்கியது. அந்த ஹீரோவின் டாப் 10 இன்னிங்ஸ் பற்றி பார்க்கலாம்.

10. 50 (20) vs மும்பை இந்தியன்ஸ் - 2012

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டார் போட்டி. 14வது ஓவரில் 93 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்திருந்தது சென்னை அணி. அதுவரையில் ஓரளவு ரன் குவித்த பத்ரிநாத் வெளியேறினார், தோனி வந்த சில பந்துகளிலேயே மைக்கேல் ஹசியும் விக்கெட்டை இழந்தார்.

ஜடேஜாவும் 1 ரன்னில் ஆட்டம் இழக்க தோனியும் ப்ராவோவும் அதிரடி காட்டினார். 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 51 ரன்களில் ஆட்டம் இழக்காமல் வெளிவந்தார்.

09. 54 (29) vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 2019

தரம்சாலா மைதானத்தில் வாழ்வா சாவா நிலையில் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புள்ளிப் பட்டியலில் 5வது இடம். இந்தப் போட்டியில் வென்றால் 14 புள்ளிகள் கிடைக்கும். ஆனால் ஏற்கெனவே 3 அணிகள் 14 புள்ளிகள் பெற்றிருந்தன. எனவே உள்ளே நுழைய சாதாரண வெற்றி போதாது!

193 இலக்குடன் பேட்டிங் வந்தது சென்னை அணி. ஓப்பனர்கள் அடுத்தடுத்து விக்கெட் ஆக சுரேஷ் ரெய்னாவும் பத்ரிநாத்தும் அணியை நிலைப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ரெய்னா 46 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பத்ரி மற்றும் தோனி கூட்டணி வெறித்தனமாக தூரத்தியது. 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசிய தோனி இரண்டு பந்துகள் மிச்சம் வைத்து வெற்றி பெற்றுக்கொடுத்தார். அணியும் பிளே ஆஃப் சென்றது.

08. 63 (31) vs டெல்லி டேர்டெவில்ஸ் – 2011

மைக்கேல் ஹசி, சுரேஷ் ரெய்னா இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். முரளி விஜய் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் 35 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார். பத்ரிநாத்தும் அதே போல விளையாட தோனி மட்டும் பிட்சில் அதிரடி காட்டினார். 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து 177 என்ற இலக்கை நிர்ணயித்தார். ஆட்டநாயகனாக போட்டியை நிறைவு செய்தார்.

07. 65 (30) vs RCB – 2008

சென்னை அணியின் ஓப்பனர்கள் சொதப்பும் போதெல்லாம் போட்டியை மீட்டுக் கொடுத்திருக்கிறார் தோனி. அதெப்போல இந்த போட்டியிலும் மேத்திவ் ஹைடன், பாரத்தீவ் படேல் சொதப்ப, அதிரடியாக விளையாடிய சுரேஷ் ரெய்னாவும் விக்கெட்டை இழந்த பிறகு தோனி களமிறங்கினார். 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்து போட்டியை வென்றது CSK.

06. 66 (33) vs KKR – 2010

இந்தப் போட்டியில் முரளி விஜய், மேத்திவ் ஹைடன், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் யாருடைய ரன் ரேட்டும் 130ஐ தாண்டவில்லை. தோனி உள்ளே வரும்போது அணி 9.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் எம்.எஸ். தோனி மட்டும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 33 பந்துகளில் 66 ரன்கள் அடித்து 164 இலக்கை நிர்ணயிக்க உதவினார். இந்த போட்டியில் கிடைத்த மொமெனட்டம் அந்த ஆண்டு கோப்பையை வெல்ல உதவியது.

05. 67 (37) vs SRH – 2013

2013 தொடரில் இந்த போட்டியில் 3 தொடர் வெற்றிகளுக்குப் பிறகு உற்சாகமாக களமிறங்கியது சென்னை அணி. இந்த ஆண்டுதான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் தொடரில் அறிமுகமானது. வலுவான பந்துவீச்சுப் படையைக் கொண்டிருந்த அந்த அணியை முதல் முறையாகச் சந்தித்த சென்னை அணி, எதிர்பாராத எதிரியை சந்தித்தது. அமித் மிஸ்ரா 3/26 என மிக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

கடைசி 2 ஓவர்களில் (12 பந்துகளில்) வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் டேல் ஸ்டெய்ன் பந்துவீச்சில் 9 ரன்கள் எடுத்த தோனி, கடைசி ஓவரில் ஆஷிஷ் ரெட்டி வீசிய பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி, 2 பந்துகள் மீதமிருக்கையிலேயே அணியை வெற்றி பெறச் செய்தார்.

04. 75 (46) vs RR – 2019

முதலில் பேட்டிங் செய்யும் அணி ஆரம்பகட்ட சரிவில் இருந்து மீண்டு வந்து வெற்றிபெறும் ஸ்க்ரிப்டுக்கு இந்த போட்டி ஒரு பக்காவான உதாரணம்.

ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணி 4.5 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை (அம்பதி ராயுடு 1, ஷேன் வாட்சன் 13, கேதார் ஜாதவ் 8) இழந்து மிகப்பெரிய நெருக்கடியில் இருந்தது.

அணி 27/3 எனத் தத்தளித்தபோது களமிறங்கிய தோனி, முதலில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். சுரேஷ் ரெய்னாவுடன் (36 ரன்கள்) இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.

தோனி தனது முதல் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆனால் அதன் பிறகு ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். குறிப்பாக ஜெய்தேவ் உனட்கட் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட 28 ரன்களை விளாசி, அணியின் ஸ்கோரை 175/5 என்ற வலுவான நிலைக்கு உயர்த்தினார்.

இறுதி ஓவர் வரை சென்ற பரபரப்பான ஆட்டத்தில், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் இந்தப் போட்டியை மறக்க முடியாததாக மாற்றியது.

இது சாதாரண இனிங்க்ஸ் அல்ல, நடுவாரிசையில் இறங்கும் வீரர் எப்படி இனிங்ஸை கட்டி எழுப்பி வெற்றிக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்ற மாஸ்டர் கிளாஸ்.

03. 79 (44) vs KXIP – 2018

இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு CSK-வின் கம்பேக் ஆண்டு அது. எதிரணியில் கிறிஸ் கெய்ல் 33 பந்துகளில் 63 ரன்கள் விளாச, பஞ்சாப் அணி 197/7 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. நீண்ட நாட்கள் சென்னை அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்த அஸ்வின், பஞ்சாப் அணியில் இருந்தார்.

6.4 ஓவர்களில் 56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை (வாட்சன், முரளி விஜய், சாம் பில்லிங்ஸ்) இழந்து தடுமாறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

அந்த சூழலில் களமிறங்கிய எம்.எஸ். தோனி, முதலில் அம்பதி ராயுடுவுடன் (49 ரன்கள்) இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 57 ரன்களும், பின்னர் ரவீந்திர ஜடேஜாவுடன் (19 ரன்கள்) இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்களும் சேர்த்து அணியை வெற்றியின் அருகே அழைத்துச் சென்றார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து ஆட்டத்தை கடைசி பந்து வரை கொண்டு சென்றார். இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

தோல்விதான் என்றாலும் கடும் முதுகு வலியால் அவதிப்பட்ட தோனி, 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்தது அணியினருக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தியது. அந்த நம்பிக்கைதான் அந்த சீசனில் கோப்பையை வெல்லச் செய்தது.

02. 70 (34) vs RCB – 2018

முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், டி காக் மற்றும் கிறிஸ் கெயில் அதிரடியால் சின்னசாமி மைதானத்தில் 205 ரன்கள் குவித்தனர்.

தொடக்கத்திலேயே வாட்சன், ரெய்னா போன்ற முன்னணி வீரர்களை இழந்து தடுமாறியது சென்னை அணி. தோனி வெறும் 34 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இவரது ஸ்டிரைக் ரேட் 205.88 ஆகும்.

இந்த போட்டியில் தோனிக்கு துணையாக ராயுடுவும் அதிரடி காட்டியிருந்தார். இந்த வெற்றி அந்த ஆண்டு கோப்பையை வெல்ல அடித்தளமாக அமைந்தது.

01. 84 (48) vs RCB – 2019

ஐபிஎல் வரலாற்றிலேயே உள்ள விறுவிறுப்பான போட்டிகளில் இதுவும் ஒன்று எனலாம். 162 என்ற டீசண்டான இலக்கை நிர்ணயித்தது ஆர்.சி.பி. அணி.

பவர்பிளே முடிவதற்குள்ளேயே வெறும் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சென்னை அணி. அப்போதே கிட்டத்தட்ட தோல்வி உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் தனி ஒருவராக வெற்றியை நோக்கி அணியை இழுத்தார் கேப்டன் தோனி.

வெறும் 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 84 ரன்கள் விளாசினார்.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டபோது, உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு போட்டியை சென்னை அணியின் பக்கம் திருப்பினினார். கடைசிப் பந்தில் தாகூர் ரன் அவுட் ஆனதால் மட்டுமே சென்னை அணி 1 ரன்னில் வெற்றியைத் தவறவிட்டது. போட்டி தோல்வில் முடிந்தாலும் தோனியின் போராட்ட குணத்துக்கு கிரிக்கெட் உலகமே தலை வணங்கியது. அவர் கோப்பைகளுக்காகவும் அதிரடிக்காகவும் அறியப்படலாம் ஆனால் அவரது போராட்ட குணத்துக்காகவே ரசிகர்கள் மனதில் குடியிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.