CSK vs MI IPL 2026 CSK vs MI IPL 2026
விளையாட்டு

IPL 2026: எலக்சன் பிஸியில CSK vs MI மறந்தாச்சா? இன்று வான்கடேவில் கால் பதிக்கும் தோனி?.. சிஎஸ்கே பவுலிங் கோச் கொடுத்த அதிரடி அப்டேட்!

தோனி விளையாடுவதற்கான வாய்ப்புகள் 50-50 என்ற நிலையில் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் ஒரு பக்கம் அனல் பறந்து கொண்டிருந்தாலும், கிரிக்கெட் பிரியர்களின் கவனம் முழுவதும் இப்போது மும்பையில் உள்ள 'வான்கடே' ஸ்டேடியத்தின் பக்கம் திரும்பியுள்ளது. 'ஐபிஎல் 2026' சீசனின் மிக முக்கியமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட 'எல் கிளாசிகோ' மோதலான 'மும்பை இந்தியன்ஸ்' மற்றும் 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (ஏப்ரல் 23) இரவு நடைபெறவுள்ளது. இந்த சீசன் தொடங்கி நான்கு வாரங்கள் ஆகிவிட்ட நிலையிலும், சிஎஸ்கே ரசிகர்களின் ஒரே கவலை "தோனி எப்போது விளையாடுவார்?" என்பதுதான். சீசன் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக தோனி அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் எப்போது களமிறங்குவார் என்பது குறித்து ஒரு பெரிய மர்மமே நீடித்து வந்தது.

தோனியின் வருகை குறித்து எழுந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கொடுக்கும் வகையில், மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் மிக முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். "தோனி இன்று விளையாடுவாரா?" என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "தோனி மீண்டும் களமிறங்குவது குறித்த முழு முடிவும் அவரிடமே விடப்பட்டுள்ளது. அவர் தனது உடல்நிலையை நன்கு அறிவார். மருத்துவக் குழுவின் ஆலோசனையுடன் அவரே இன்று விளையாடுவது குறித்து இறுதி முடிவை எடுப்பார். நான் இது குறித்து எந்த அறிவிப்பையும் இங்கே வெளியிடப் போவதில்லை" என்று சஸ்பென்ஸை இன்னும் அதிகரித்துள்ளார். இதன் மூலம், தோனி விளையாடுவதற்கான வாய்ப்புகள் 50-50 என்ற நிலையில் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை வான்கடே மைதானத்தில் நடந்த வலைப்பயிற்சியில் தோனி மிக நீண்ட நேரம் ஈடுபட்டது ரசிகர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. சுமார் 40 நிமிடங்கள் விக்கெட் கீப்பிங் பயிற்சியிலும், அதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டார். காயம் ஏற்பட்ட பிறகு தோனி மேற்கொண்ட மிகக் கடுமையான பயிற்சி இதுதான் என்று சொல்லப்படுகிறது. இதை நேரில் பார்த்த ரசிகர்கள், இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 'தல' தோனி நிச்சயம் விளையாடுவார் என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். ஒருவேளை அவர் முழுமையாக விளையாடாவிட்டாலும், 'இம்பாக்ட் பிளேயராக' களமிறங்கவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காயங்களால் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது காயம் காரணமாகத் தொடரில் இருந்தே விலகியது அந்த அணிக்குப் பலத்த அடியாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து சிஎஸ்கே-வின் நம்பிக்கைக்குரிய வீரர் ஆயுஷ் மத்ரேவும் காயம் காரணமாக இந்த சீசன் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில், அனுபவம் வாய்ந்த தோனியின் வருகை சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தெம்பைக் கொடுக்கும். குறிப்பாக மிடில் ஆர்டரில் ரன்களைச் சேர்க்கவும், இக்கட்டான நேரங்களில் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கவும் தோனியின் பங்கு இப்போதைய சிஎஸ்கே அணிக்கு மிக அவசியமாக உள்ளது.

புள்ளிப் பட்டியலைப் பொறுத்தவரை, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே, எட்டாவது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் ஹைதராபாத் அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது அந்த அணிக்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதே போன்ற நிலையில் ஏழாவது இடத்தில் உள்ளது. எனவே, இன்று நடக்கும் இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்குமே 'வாழ்வா?-சாவா?' போராட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்