இருபதுக்கு இருபது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுமா அல்லது தொடரை விட்டு வெளியேறுமா என்பதைத் தீர்மானிக்கும் வாழ்வா சாவா போராட்டமாக இலங்கை அணிக்கு எதிரான போட்டி அமைந்துள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான தனது இரண்டாவது சூப்பர் 8 போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான அவர்களின் முதல் போட்டி மழையினால் ஒரு புள்ளி மட்டும் பகிர்ந்தளிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் தற்போது விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு புள்ளியுடன் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் இக்கட்டான நிலையில் உள்ளது.
தற்போதைய குரூப் 2 புள்ளிப்பட்டியலை உற்று நோக்கினால், இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஆறுக புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதியை உறுதி செய்துள்ளது. நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்திலும், இலங்கை அணி புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால், புள்ளிகள் அடிப்படையில் மட்டுமின்றி நிகர ரன் ரேட் அடிப்படையிலும் நியூசிலாந்தை முந்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி +1.390 என்ற வலுவான ரன் ரேட்டை வைத்துள்ள நிலையில், பாகிஸ்தான் -0.461 என்ற பின்னடைவான ரன் ரேட்டைக் கொண்டுள்ளது.
இந்தச் சூழலில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டிய இலக்கு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. இதன்படி, பாகிஸ்தான் அணி தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை குறைந்தது 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். ஒருவேளை பாகிஸ்தான் அணி இரண்டாவதாகப் பேட்டிங் செய்தால், இலங்கை நிர்ணயிக்கும் இலக்கை 13 ஓவர்களுக்குள்ளாகவே அதிரடியாக அடித்து வெற்றி பெற வேண்டும். ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் முடிந்த பின்னரே துல்லியமான ரன் ரேட் கணக்கீடுகள் தெரியவரும் என்றாலும், பாகிஸ்தான் ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்தால் மட்டுமே நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்குள் நுழைய முடியும்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் இங்கிலாந்து அணியிடம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோல்வியடைந்ததே பாகிஸ்தானுக்கு இந்த இறுதி வாய்ப்பைத் திறந்துவிட்டுள்ளது. அந்தப் போட்டியில் 160 ரன்களைத் தற்காத்த நியூசிலாந்து அணி, இங்கிலாந்தை 117 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எனத் திணறடித்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் வில் ஜாக்ஸ் மற்றும் ரெஹான் அகமது ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி மூன்று பந்துகள் மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தத் தோல்வி குறித்துப் பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் தங்கள் வேலை எளிதாக இருந்திருக்கும் என்றும், இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியைத் தட்டிச் சென்றுவிட்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்கு கிடைத்துள்ள இந்த கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அந்த அணி வீரர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். இலங்கை அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டாலும், பாகிஸ்தானின் கனவைத் தகர்க்கும் முனைப்புடன் விளையாடுவார்கள் என்பதால் மைதானத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட வேண்டியது அவசியமாகும். அதேபோல் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணியை மிகக் குறைந்த ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் இப்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்தப் போட்டியின் மீதே குவிந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.