ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 171 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டுவதற்கு மிக முக்கியமான காரணம் சாஹிப்சாதா ஃபர்ஹானின் அதிரடியான ஆட்டம் தான். இந்தப் போட்டியில், அவர் 45 பந்துகளில் 58 ரன்கள் குவித்து, இந்திய ஆல்ரவுண்டர் சிவம் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரது அரைசதம் பாகிஸ்தான் அணிக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தாலும், அரைசதம் அடித்த பிறகு அவர் கொண்டாடிய விதம் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியது. 50 ரன்களைக் கடந்த பிறகு, ஃபர்ஹான் தனது பேட்டை வைத்து ‘துப்பாக்கி சுடுவது’ போன்ற சைகை செய்து தனது அரைசதத்தைக் கொண்டாடினார். அவரது இந்தச் செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான பாகிஸ்தானின் இரண்டாவது சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவுக்கு எதிரான தனது கொண்டாட்டம் குறித்து ஃபர்ஹானிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த 29 வயதான ஃபர்ஹான், தனது கொண்டாட்டம் குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தனக்கு கவலை இல்லை என்றும், தான் விரும்பிய விதத்தில் அதை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.
"நீங்கள் சிக்ஸர்களைப் பற்றிப் பேசினால், எதிர்காலத்தில் நீங்கள் நிறைய சிக்ஸர்களைப் பார்ப்பீர்கள். அந்தக் கொண்டாட்டம் அந்த நேரத்தில் தானாகவே வந்தது. நான் பொதுவாக அரைசதம் அடித்த பிறகு அதிகம் கொண்டாடுவதில்லை. ஆனால், அன்று திடீரென ஒரு கொண்டாட்டம் செய்ய வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. அதை நான் செய்தேன். அதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நீங்கள் எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அது இந்தியாவுக்கு எதிராக மட்டும் இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும்," என்று அவர் கேள்விக்கு பதிலளித்தார்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் உத்தி குறித்துக் கேட்கப்பட்டபோது, ஆரம்பகட்ட ஓவர்களில் (powerplay) நிறைய விக்கெட்டுகளை இழந்ததுதான் அணிக்கு இருந்த முக்கியப் பிரச்சினை என்று ஃபர்ஹான் கூறினார். இந்த சிக்கலை சரிசெய்வது முக்கியம், அதே நேரத்தில் முதல் ஆறு ஓவர்களில் ரன்களை சேர்ப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"கடந்த சில போட்டிகளில் எங்கள் அணிக்கு பவர்பிளேயை சரியாகப் பயன்படுத்தாதது ஒரு குறையாக இருந்தது நான் நினைக்கிறேன். நாங்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தோம். பவர்பிளேயை நன்றாகப் பயன்படுத்துவதும், அதே நேரத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் இருப்பதும் முக்கியம்.
இன்று நாங்கள் பவர்பிளேயில் விளையாடிய விதம், நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழக்கவில்லை. கடவுளின் அருளால், முதல் 10 ஓவர்களில் நாங்கள் 90 ரன்களுக்கு மேல் எடுத்ததால், எங்கள் பவர்பிளேவும் மிகவும் நன்றாக இருந்தது. மிடில் ஓவர்களில் நாங்கள் தடுமாறினோம், ஆனால் அதை நிச்சயம் சரி செய்வோம்" என்று தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.