Pat Cummins 
விளையாட்டு

பேட் கம்மின்ஸ்க்கு ரூ. 113 கோடி மெகா ஆஃபர்: ஐபிஎல் அணிகளுக்கு செக் வைக்க ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு!

வெற்றிக்குப் பிறகு பேசிய கம்மின்ஸ், "பஞ்சாப் கிங்ஸ் ஒரு வலிமையான அணி, அவர்கள் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர்.

மாலை முரசு செய்தி குழு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 113 கோடி) மதிப்பிலான நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடுவதை உறுதி செய்யவும், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் இந்த மெகா டீல் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் கம்மின்ஸ்க்கு, ஆண்டுக்கு 4 மில்லியன் டாலர் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஐபிஎல் அணியைச் சேர்ந்த ஒரு உரிமையாளர் கம்மின்ஸ்க்கு சுமார் 10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (சுமார் 6.6 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்க முன்வந்ததாகச் செய்திகள் பரவின. ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடுவதை விட்டுவிட்டு, அந்த நிறுவனம் சார்ந்த சர்வதேச டி20 லீக் போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் என்பதே அந்த ஆஃபரின் நிபந்தனை என்று கூறப்பட்டது. இத்தகைய கவர்ச்சிகரமான ஆஃபர்களால் நட்சத்திர வீரர்கள் தேசிய அணியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களுக்கு நீண்ட காலப் பாதுகாப்பும், கூடுதல் ஊதியமும் வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஜேம்ஸ் ஆல்சாப் சாதகமாகப் பதிலளித்துள்ளார். "நிச்சயமாக, அவர்கள் அதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். நீண்ட காலமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிற்காக அவர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்களுக்குச் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய மவுசு உள்ளது. எனவே, அவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்வது எங்களது முதன்மையான கடமையாகும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சமே, கம்மின்ஸ் எத்தனை போட்டிகளில் விளையாடுகிறார் என்பதைப் பொறுத்து அவரது ஊதியம் இருக்காது; மாறாக, ஒப்பந்தத்தின்படி முழுத் தொகையும் அவருக்கு உறுதி செய்யப்படும் என்பதுதான். இதன் மூலம் அவருக்குத் தேவையான ஓய்வையும், பணிச்சுமை மேலாண்மையையும் ஆஸ்திரேலிய வாரியம் கவனித்துக் கொள்ளும். ஒரு நட்சத்திர வீரர் கிளப் அணிகளின் பின்னால் செல்லாமல், நாட்டின் கௌரவத்திற்காக விளையாடுவதை உறுதி செய்ய இது ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

மறுபுறம், கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் 2026 தொடரில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. புதன்கிழமை நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் கூப்பர் கானோலி அதிரடியாகச் சதம் அடித்த போதிலும், ஹைதராபாத் அணியின் நேர்த்தியான பந்துவீச்சால் வெற்றி வசமானது. இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய கம்மின்ஸ், "பஞ்சாப் கிங்ஸ் ஒரு வலிமையான அணி, அவர்கள் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர். அவர்களுக்கு எதிராகச் சவாலான இலக்கை நிர்ணயித்த எங்களது பேட்ஸ்மேன்கள் மற்றும் அதைச் சிறப்பாகத் தற்காத்த பந்துவீச்சாளர்கள் என ஒட்டுமொத்த அணியின் செயல்பாடும் மிகத் துல்லியமாக இருந்தது" என்று மகிழ்ச்சி தெரிவித்தார். ஐபிஎல் தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ள உற்சாகத்தில் கம்மின்ஸ் மற்றும் அவரது ஹைதராபாத் படை உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.