இந்திய கிரிக்கெட் அணி ஒரு புதிய யுகத்தை நோக்கி பயணிக்குது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இளம் தலைவர் ஷுப்மன் கில்லின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் லீட்ஸ் நகரிலுள்ள ஹெடிங்லி மைதானத்தில் களமிறங்கியிருக்கு. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியிருக்கார், அதே நேரம் கருண் நாயர் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்கு மறுவரவு கொடுத்திருக்கார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 20) லீட்ஸ் நகரிலுள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டி ஆண்டர்சன்-டெண்டுல்கர் ட்ரோபிக்காக நடக்குற ஐந்து டெஸ்ட் போட்டிகளின் தொடரின் முதல் போட்டியாகும். இந்திய அணியில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், 25 வயதே ஆன ஷுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்று, இளம் வீரர்களை வழிநடத்துறார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ஹெடிங்லி மைதானத்தின் ஆரம்ப நிலைமைகளைப் பயன்படுத்தி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய வைக்க முடிவு செய்தார்.
ஷுப்மன் கில், டாஸ் குறித்து பேசும்போது, தாங்களும் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்திருப்போம்னு கூறினார். முதல் சில மணி நேரங்கள் சவாலாக இருக்கலாம், ஆனா பின்னர் இந்த பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக மாறும்னு நினைக்கிறேன் என்றார். பிறகு பேசிய கில், “வெயில் வந்திருக்கு, இது ஒரு நல்ல பேட்டிங் பிட்சாக இருக்கும். எங்களுடைய preparation அருமையாக இருந்தது, பெக்கன்ஹாமில் ஒரு பயிற்சி ஆட்டம் ஆடினோம், அணியில் உள்ளவர்கள் எல்லாம் நல்ல மனநிலையில் இருக்காங்க. சாய் அறிமுகமாகுறார், கருண் மறுவரவு செய்யுறார். சாய் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார்,” என்று கில் கூறினார்.
பென் ஸ்டோக்ஸ், டாஸ் முடிவை விளக்கும்போது, “ஹெடிங்லி ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் பிட்ச். இங்கு நல்ல ஆட்டங்கள் நடந்திருக்கு. ஆரம்ப நிலைமைகளை பயன்படுத்திக்க முயற்சிக்கிறோம். இது எங்களுக்கு நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு வந்திருக்கு, இது இரண்டாவது தொடர் மட்டுமே ஆனா நாங்க தயாரா இருக்கோம். முதல் ஏழு இடங்களில் வழக்கமான வீரர்கள், வோக்ஸ், பிரைடன், பஷீர், டங்கு, நானும் பந்துவீச்சுக்கு தயாரா இருக்கோம்,” என்று கூறினார்.
இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து அணி: ஸாக் க்ராலி, பென் டகெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, ஷோயப் பஷீர்.
சாய் சுதர்சன், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 வயது இளம் வீரர், இந்தியாவின் 317-வது டெஸ்ட் வீரராக இந்தப் போட்டியில் அறிமுகமாகியிருக்கார். இவர் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கார், இது முன்னாள் வீரர் சேதேஷ்வர் புஜாராவால் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடம். சுதர்சனுக்கு இந்திய டெஸ்ட் கேப் புஜாராவால் வழங்கப்பட்டது, இது ஒரு உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.
சுதர்சனின் அறிமுகம் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையை உருவாக்குது—ஜூன் 20 அன்று இந்திய கிரிக்கெட்டின் மூன்று பெரிய நட்சத்திரங்களான சவுரவ் கங்குலி (1996), ராகுல் டிராவிட் (1996), மற்றும் விராட் கோலி (2011) ஆகியோர் தங்களோட டெஸ்ட் அறிமுகத்தை செய்திருக்காங்க. இந்தத் தேதியில் தான் இன்றைய சுதர்சனின் அறிமுகமும். சூப்பர்ல!
சுதர்சன் IPL 2025-ல குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 759 ரன்கள் குவிச்சு ஆரஞ்சு கேப் வென்றவர். 54.21 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் ஆறு அரைசதங்கள் அடிச்சிருக்கார். 2023 மற்றும் 2024-ல சர்ரே அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிய அனுபவம், இங்கிலாந்து நிலைமைகளில் இவருக்கு பயனளிச்சிருக்கு. இருப்பினும், இவரோட முதல் தர கிரிக்கெட் சராசரி 39.93 ஆக இருக்கு, இது 1987/88-ல வூகேரி ராமனுக்குப் பிறகு முதல் முறையாக 40-க்கு கீழ் சராசரியுடன் டெஸ்ட் அறிமுகமாகுற இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக சாய் களமிறங்குகிறார்.
கருண் நாயர், 33 வயது வீரர், 2017 மார்ச்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, எட்டு வருட இடைவெளியில் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருக்கார். இவர் 2016-ல இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் 303 ரன்கள் அடித்து, இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் முந்நூறு அடித்த வீரராக பதிவு செய்யப்பட்டவர். ஆனா, 2018-ல இங்கிலாந்து டூரில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது, இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாயரின் மறுவரவு, இவரோட உள்ளூர் கிரிக்கெட் செயல்பாடுகளால்தான் சாத்தியமாச்சு. 2023-24 மற்றும் 2024-25 ரஞ்சி ட்ரோபி சீசன்களில் விதர்பாவுக்கு ஆடி, 690 மற்றும் 863 ரன்கள் குவிச்சார். 2024-25 சீசனில் மூன்று சதங்கள், இதுல ஒரு இறுதிப் போட்டி சதமும் அடங்கும், விதர்பாவுக்கு மூன்றாவது ரஞ்சி கோப்பையை வெல்ல உதவியது. இந்த மாதம் இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக 24-வது முதல் தர சதமாக ஒரு இரட்டை சதம் அடிச்சது, இவரோட தேர்வுக்கு வலுவான காரணமாக அமைந்தது.
நாயர் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கார், இது இவருக்கு புதிய இடமாக இருந்தாலும், இவரோட அனுபவமும், நீண்ட இன்னிங்ஸ் ஆடுற திறனும் இந்திய அணிக்கு முக்கியமான பலமாக இருக்கும். முன்னாள் வீரர் மொகமது கைஃப், நாயரை ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லக்ஷ்மண், புஜாரா மாதிரி நீண்ட நேரம் ஆடக்கூடிய வீரராக பாராட்டியிருக்கார்.
ஹெடிங்லி மைதானத்தின் பிட்ச் 9 மிமீ புல் உயரத்துடன், பச்சை நிறத்துடன் இருக்கு. இது ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சீம் இயக்கத்தையும், ஸ்விங்கையும் வழங்கும். முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், இந்த பிட்ச் முதல் இரண்டு நாட்களுக்கு பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும், ஆனா பின்னர் வறண்டு, விரிசல்கள் உருவாகி, சுழற்பந்து வீச்சுக்கு உதவலாம்னு கூறியிருக்கார். பந்து வீச்சாளர்கள் முழு நீளத்தில் பந்து வீசி, பேட்ஸ்மேன்களை டிரைவ் ஆட வைக்கணும், குறுகிய பந்துகளுக்கு இங்கு கட் மற்றும் புல் ஷாட்களுக்கு வாய்ப்பு குறைவு. மூன்று அல்லது நான்கு ஸ்லிப் ஃபீல்டர்கள் முதல் நாள் முழுக்க அவசியம். பிட்ச் வறட்சியால் ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கலாம், ஆனா புதிய பந்தை சரியாக பயன்படுத்தணும்.
இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள்—ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா—மற்றும் ஆல்-ரவுண்டர் ஷார்துல் தாக்கூருடன் களமிறங்கியிருக்கு. ரவீந்திர ஜடேஜா ஒரே சுழற்பந்து வீச்சாளராக இருக்கார். இங்கிலாந்து அணியோ கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, ஷோயப் பஷீர் ஆகியோரை பந்து வீச்சுக்கு தேர்ந்தெடுத்திருக்கு. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாகவும், சுதர்சன் மூன்றாவது இடத்திலும், கில் நான்காவது இடத்திலும், ரிஷப் பந்த் ஐந்தாவது இடத்திலும், நாயர் ஆறாவது இடத்திலும் ஆடுறாங்க.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.