
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் பல விமானங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டிருப்பது பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த ஜூன் 12 அன்று, ஏர் இந்தியாவின் விமானம் AI171, அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சில நொடிகளில் மேகானி நகர் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர், ஒரே ஒரு பயணியான விஷ்வாஷ்குமார் ரமேஷ், பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
விமானம் புறப்பட்டு 30 விநாடிகளுக்குள் 625 அடி உயரத்தில் இருந்து திடீரென உயரத்தை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி எரிந்தது. விமானத்தில் இருந்த 125,000 லிட்டர் எரிபொருள், வெப்பநிலை உயர்ந்து தீப்பிழம்பாக வெடித்தது, இதனால் பயணிகளை மீட்க முடியவில்லை. விபத்து நடந்த இடத்தில் உள்ள விடுதியில் மதிய உணவு நேரத்தில் இருந்த மாணவர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்தனர், இதனால் மொத்த உயிரிழப்பு 270-ஐ தாண்டியது.
இந்த சூழலில், ஏர் இந்தியா நிறுவனத்தின் 20-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு காரணங்கள்" காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
AI906: துபாய்-சென்னை
AI308: டெல்லி-மெல்போர்ன்
AI309: மெல்போர்ன்-டெல்லி
AI2204: துபாய்-ஹைதராபாத்
ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு விமானங்கள்:
AI874: புனே-டெல்லி
AI456: அகமதாபாத்-டெல்லி
AI571: சென்னை-மும்பை
AI2872: ஹைதராபாத்-மும்பை
இந்த விமானங்கள், டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், புனே போன்ற முக்கிய உள்நாட்டு நகரங்களையும், துபாய், மெல்போர்ன் போன்ற சர்வதேச இடங்களையும் இணைக்கும் முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்பட்டவை.
அகமதாபாத் விபத்துக்கு பிறகு, இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, ஏர் இந்தியாவின் 33 போயிங் 787 விமானங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஆய்வுகளை உத்தரவிட்டது. இதில் 26 விமானங்கள் மட்டுமே ஆய்வு முடிந்து இயக்கத்துக்கு தயாராக இருக்கு. மீதமுள்ளவை பராமரிப்பில் இருப்பதால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விபத்துக்கான காரணத்தை கண்டறிய, இந்திய விமான விபத்து விசாரணை பணியகம் (AAIB) மற்றும் அமெரிக்க NTSB ஆகியவை விசாரணை நடத்துகிறது.
இந்நிலையில், தற்போதைய விமான ரத்துகள், குறிப்பாக துபாய்-சென்னை (AI906), டெல்லி-மெல்போர்ன் (AI308), சென்னை-மும்பை (AI571) விமானங்களின் ரத்து பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.