‘விஸ்வரூபம் எடுத்த இளவரசன்..’ 223 விளாசிய கில்! ஒரே போட்டியில் 5 சதங்கள்... சச்சின், விராட்டுக்கு பின் ரோஹித் செய்த சாதனை! BCCI
விளையாட்டு

‘விஸ்வரூபம் எடுத்த இளவரசன்..’ 223 விளாசிய கில்! ஒரே போட்டியில் 5 சதங்கள்... சச்சின், விராட்டுக்கு பின் ரோஹித் செய்த சாதனை!

27 வயதாகும் கில், ரோஹித் சர்மாவுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த வீரராக உருவெடுத்துள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

இந்திய கேப்டன் சுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமான இரட்டைச் சதத்தை அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி, உலகிலேயே அதிகபட்ச டார்கெட்டை சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது.

நேற்று கவுகாத்தியில் நடந்த போட்டியில், பாரபட்சமின்றி இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளும் ரன் மழை பொழிந்தன. இந்தப் போட்டிதான், ஒரே போட்டியில் 5 சதங்கள் அடிக்கப்பட்ட முதல் போட்டி. பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

சாதனை படைத்த இளவரசன் கில்

சர்வதேச பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கில், தனது கேரியரின் மிக விரைவான ஒருநாள் சதத்தையும் (62 பந்துகள்), உலகிலேயே மிக விரைவான ஒருநாள் இரட்டைச் சதத்தையும் (117 பந்துகள்) பதிவு செய்தார்.

இது கில்லின் இரண்டாவது ஒருநாள் இரட்டைச் சதமாகும். முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இரட்டைச் சதம் அடித்திருந்தார்.

இதன்மூலம், 27 வயதாகும் கில், ரோஹித் சர்மாவுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த வீரராக உருவெடுத்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அமீர் ஜாங்கோ, ஷாய் ஹோப் மற்றும் ஜான் கேம்பல் ஆகிய மூன்று வீரர்களும் சதம் அடித்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 405 ரன்கள் சேர்த்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குமூர் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினார்.

39 வயதில் சதம் அடித்த ரோஹித்

இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் - ரோஹித் சர்மா ஜோடி 255 ரன்கள் சேர்த்தது. ரோஹித் 101 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, கேப்டன் கில் உடன் விராட் இணைந்தார்.

இந்தச் சதத்தின் மூலம் தனது ஒருநாள் கேரியரில் 12,000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம், குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இரு வீரர்கள் மட்டுமே இந்த மைல்கல்லைக் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 39 ஆண்டுகள் 153 நாட்கள் வயதாகும் அவர்தான், அதிக வயதில் ஒருநாள் சதம் அடித்த இந்திய வீரர்.

அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி, 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, ருதுராஜ் கெய்க்வாட் - கில் இணை 43.3 ஓவர்களில் 406 ரன்கள் அடித்து வெற்றியைப் பெற்றது.

இறுதியாக, கில் 133 பந்துகளில் 223 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒருநாள் போட்டிகளில் ஒரு கேப்டனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்