விளையாட்டு

"எங்க லெவல் வேற.. பாக்., லெவல் வேற.. இனி அப்படி சொல்லாதீங்க" - பாகிஸ்தானை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த சூர்யகுமார் யாதவ்!

ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் அற்புதமான தொடக்க ஆட்டம், பாகிஸ்தான் பந்துவீச்சை நிர்மூலமாக்கியது..

மாலை முரசு செய்தி குழு

துபாயில் நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் ஒருமுறை வீழ்த்திய பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியவை கவனிக்க வைத்துள்ளன.

பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் சிறந்த முறையில் போட்டியிட்டதா என்று கேட்டபோது, சூர்யகுமார் யாதவ் ஒரு புன்னகையுடன், “தயவுசெய்து நீங்கள் அனைவரும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை Rivalry என விவரிப்பதை நிறுத்த வேண்டும். நான் பேசுவது ஒரு விளையாட்டுப் போட்டி பற்றி அல்ல, ஆனால் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பேசுகிறேன்.

என் பார்வையில், ஒரு உண்மையான Rivalry என்பது, இரண்டு அணிகள் 15 முதல் 20 போட்டிகளில் மோதி, அதன் முடிவுகள் 7-7 அல்லது 8-7 என சமநிலையில் இருக்கும்போதுதான் அது ஒரு Rivalry கருதப்படும். ஆனால், இங்கு புள்ளிவிவரங்கள் 13-0, 10-1 என்ற விகிதத்தில் உள்ளன. எனக்குச் சரியான புள்ளிவிவரங்கள் தெரியவில்லை, அதனால் இது ஒரு Rivalry அல்ல. என் கருத்துப்படி, நாங்கள் அவர்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறோம், பந்துவீச்சிலும் அதைவிட சிறப்பாகவே இருக்கிறோம்,” என்று சூர்யகுமார் யாதவ் நேரடியாக தெரிவித்தார்.

அவரது இந்தக் கருத்து, களத்தில் இந்திய அணி வெளிப்படுத்திய ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. இந்தியா, இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் 171 ரன்கள் என்ற இலக்கை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாகத் துரத்தி வென்றது. அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் அற்புதமான தொடக்க ஆட்டம், பாகிஸ்தான் பந்துவீச்சை நிர்மூலமாக்கியது. அபிஷேக் ஷர்மாவின் 74 ரன்களும், சுப்மன் கில்லின் 47 ரன்களும், இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தன. இந்த இரு இளம் வீரர்களும், எந்த விதமான பதற்றமும் இல்லாமல், பாகிஸ்தானின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் துணிச்சலான ஷாட்களை விளையாடினர்.

வெற்றிக்குப் பிறகு, அணியின் பயிற்சியாளராகப் பதவி வகிக்கும் கௌதம் கம்பீர், “அச்சமற்ற” (Fearless) என்ற ஒற்றை வார்த்தையை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இந்த இளம் வீரர்களின் மனப்பான்மையைப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.