இந்திய கிரிக்கெட் அணிக்காக டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற சில நாட்களிலேயே, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சூர்யகுமார் யாதவை அணியில் இருந்து நீக்கியது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யகுமாரின் பேட்டிங் ஃபார்ம் சரிவைச் சந்தித்ததே, அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.
2025-ஆம் ஆண்டில் சூர்யகுமாரால் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. டி20 உலகக் கோப்பை தொடரிலும் கூட, தனது சொந்த மைதானமான வான்கடேவில் அமெரிக்காவுக்கு எதிராக அடித்த ஒரு இன்னிங்ஸைத் தவிர, பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால், கேப்டனாக சூர்யகுமார் சிறப்பாகவே செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி ஒரு தொடரில்கூட தோல்வியடையாமல், சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
ஆரம்பத்தில், இந்த நீக்கம் குறித்து தான் பெரிய அளவில் வருத்தப்படவில்லை என்றும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் தேர்வுக்குழுவின் இடத்தில் இருந்து சிந்தித்துப் பார்க்க முயன்றதாகவும் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில் பேசிய சூர்யகுமார் யாதவ், “அணிப் பட்டியலில் என் பெயர் இல்லாததைக் கண்டபோது நான் சிரித்துவிட்டேன். ஏனெனில், கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக அணியுடன் விளையாடியபோதும் சரி, நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டபோதும் சரி, நாட்கள் எனக்குச் சாதகமாக இல்லாதபோதெல்லாம் நான் சிரித்துக்கொண்டேதான் கடந்து வந்திருக்கிறேன். மனதை அமைதியாக வைத்துக்கொள்வேன். எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்காக எப்போதும் நன்றியோடு இருந்திருக்கிறேன்” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “நிச்சயமாக இப்படியொரு நிலைமை வரும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. 2026-க்குப் பிறகும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வேன் என்றுதான் நம்பியிருந்தேன். ஒலிம்பிக் வரவிருக்கிறது. அதற்குப் பின் மற்றொரு டி20 உலகக் கோப்பை எனப் பல சவால்கள் காத்திருந்தன. ஆனால், நாம் நினைப்பதற்கும் மற்றவர்கள் யோசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்களின் முடிவை நாம் மதிப்பது அவசியம். எதிர்காலத்திற்கு இதுதான் சரியான முடிவு என்று அவர்கள் நினைத்து ஒரு முடிவை எடுத்தார்கள். அதற்கு நான் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை. ஏனெனில், அது அவர்களின் முடிவு. மற்றொருவரின் தலைமையில் இந்த அணி சிறப்பாகச் செயல்படும் என்றால், எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று விளக்கமளித்தார்.
இருப்பினும், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவின் இந்த அதிரடி முடிவை ஏற்றுக்கொள்வதில் காலப்போக்கில் தனக்குச் சிரமம் ஏற்பட்டதாகச் சூர்யகுமார் ஒப்புக்கொண்டார். ஏனெனில், அவரது தலைமையில் இந்திய டி20 அணி ஒரு தொடரைக்கூட தோற்காமல் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.
“தேர்வுக்குழு தேர்வு செய்த அணியைப் பார்த்தேன். ஸ்ரேயாஸுடன் நான் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அவர் ஒரு நல்ல வீரர், நல்ல மனிதர் மற்றும் திறமையான கேப்டனும்கூட. அதனால், ‘அவரை ஏன் கேப்டனாக்கினார்கள்?’ என்ற கேள்வி எனக்குள் எழவில்லை. ஆனால், எனக்குச் சிறிய ஏமாற்றம் இருந்தது உண்மைதான். இரண்டு ஆண்டுகளாக ஒரு தொடரைக்கூட தோற்கவில்லை. ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை என இரண்டையும் வென்று கொடுத்து, எல்லாமே சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென மாற்றம் ஏன்? என்ன காரணம்? என்ற கேள்வி என் மனதை உருட்டிக்கொண்டே இருந்தது. ஒன்றரை மாதங்கள் வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருந்தேன்.
உலகக் கோப்பையை வென்ற கையோடு இது எப்படி சாத்தியம் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். ஆம், ஐபிஎல் தொடர் நான் எதிர்பார்த்தபடி அமையவில்லைதான். வீட்டில் நண்பர்களும் குடும்பத்தினரும் வந்து ஆறுதல் சொன்னார்கள். ‘வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்’ என்றார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, வீட்டில் தனியாக இருக்கும்போது அந்த நினைவுகள் என்னை வாட்டின” என்று உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.
அணி அறிவிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, தேர்வுக்குழு தன்னைத் தொடர்புகொண்டு பேசியதாகச் சூர்யகுமார் வெளிப்படுத்தியுள்ளார்.
“அணி அறிவிப்புக்கு 2-3 நாட்களுக்கு முன்பு என்னை அழைத்தார்கள். ‘அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று சொன்னார்கள். நான் அமைதியாகவே இருந்தேன். ஏனெனில், அதில் என் தவறு எதுவும் இல்லை. சூர்யகுமார் யாதவ் எப்போதும் யாருடனும் சண்டையிடுபவன் அல்ல. எது அணியின் எதிர்காலத்திற்கு நல்லது என்று அவர்கள் நினைத்தார்களோ, அந்த முடிவை எடுத்தார்கள். அதை என்னிடம் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான்.
நான் எப்போதும் தயார்நிலையில் தான் இருக்கிறேன். எப்போது கூப்பிட்டாலும் விளையாடத் தயார். தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருப்பேன். சரியான நேரம் வரும்போது விஷயங்கள் தானாக மாறும்” என்று நம்பிக்கையுடன் பேட்டியை முடித்தார் சூர்யகுமார் யாதவ்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்