நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் மோதின. இதில், 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் 2026 சீசனின் துவக்கம் சென்னை அணிக்கு சிறப்பாக அமையவில்லை. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில், 209 ரன்கள் எடுத்தும், பீல்டிங்கில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக 210 ரன்கள் இலக்கை பாதுகாக்க முடியாமல் மீண்டும் தோல்வியை சந்தித்தது.
இந்த இரண்டு போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை. முதல் போட்டியில் 7 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், இரண்டாவது போட்டியில் 7 பந்துகளில் 7 ரன்கள் எடுத்துக் கொண்டே அவுட் ஆனார். சமீபத்தில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ரன் மழை பெய்திருந்த போதிலும், சாம்சனின் இந்த தொடர் குறைந்த செயல்திறன் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய போட்டியில் பார்ட்லெட் வீசிய உடம்பை நோக்கி வந்த ஷார்ட் பாலை அடிக்க முயன்ற சாம்சன், விக்கெட் கீப்பருக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த போட்டியிலும் இதே நிலை தொடர்ந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க நேரிடும்.
சென்னை அணியின் ஓபனர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து 29 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதுவே பெரிய ஸ்கோரை எட்ட முடியாததற்கான முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், சிஎஸ்கே 5 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தியது கவனிக்கத்தக்கது. ஷிவம் துபே பந்துவீசும் திறன் கொண்டவராக இருந்தும், அவருக்கு ஒரு ஓவரும் வழங்கப்படவில்லை. ஸ்பின்னர்கள் நூர் அகமது மற்றும் ராகுல் சஹார் எதிர்பார்த்த அளவில் செயல்படாததால், மிடில் ஓவர்களில் விக்கெட்கள் எடுக்க முடியவில்லை. மொத்தத்தில், சிஎஸ்கே பந்துவீச்சு துறை சரிவில் இருப்பது தோல்விக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், சர்பராஸ் கான் 12 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். மேலும் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் ஆட்டத்தை கவர்ந்தார். ஷிவம் துபேவும் 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார். இவர்களின் சிறப்பான பேட்டிங்கிற்குப் பிறகும், பந்துவீச்சில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக சென்னை அணி மீண்டும் தோல்வியைத் தழுவியது.
மற்றொரு பக்கம், முந்தைய போட்டியில் மெதுவான ஓவர் வீதம் காரணமாக தண்டனை பெற்றிருந்த பஞ்சாப் அணியின் கேப்டன், இந்த போட்டியிலும் அதே தவறை செய்தார். இதனால், ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது இந்த சீசனில் அவரின் இரண்டாவது குற்றமாகும். மேலும், அணியின் மற்ற வீரர்களுக்கும் 6 லட்சம் ரூபாய் அல்லது போட்டி ஊதியத்தின் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏப்ரல் 5ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.