கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஐபிஎல் 2016 தொடரில் விராட் கோலி டி20 கிரிக்கெட்டின் பேட்டிங் ஸ்டைலையே முற்றிலும் மாற்றி அமைத்தார். அந்த ஒரே சீசனில் 4 சதங்கள், 7 அரைசதங்கள் விளாசி 973 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே இன்றுவரை ஒரு வீரரின் மிகச்சிறந்த தனிநபர் சாதனையாக இதுதான் பார்க்கப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை கடந்த 2025-ஆம் ஆண்டில் தான் வென்றது என்றாலும், கோலி 2016-லேயே தனது அசாத்திய பேட்டிங்கால் மகுடம் சூடிவிட்டார். ஆனால், தற்பொழுது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2026 தொடரில், கோலியின் அந்த அரிய சாதனைக்கு ஒரு மிகப்பெரிய சவால் முளைத்துள்ளது. அதுவும் விராட் கோலியின் கண் முன்னாடியே இந்த சாதனை முறியடிக்கப்பட வாய்ப்புள்ளது தான் இதில் சுவாரசியமான விஷயம்.
கிரிக்கெட் உலகையே தனது ஒவ்வொரு ஆட்டத்திலும் வாயடைத்துப் போகச் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி தான் அந்த சவாலை ஏற்படுத்தியுள்ளார். கடந்த புதன்கிழமை நடந்த ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், தனது 2-ஆவது ஐபிஎல் சீசனிலேயே 680 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த தனிநபர் சாதனைகளின் பட்டியலில் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார். மேலும், இந்த பட்டியலில் அவர் முதலிடத்தைப் பிடிக்கவும் இன்னும் வாய்ப்புள்ளது.
நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் அதிகபட்சமாக 2 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன என்பதால், கோலியின் 973 ரன்கள் என்ற இமாலய சாதனையை சூர்யவன்ஷி ரன்களின் அடிப்படையில் முறியடிப்பது கடினம் தான். ஆனால், 15 வயதே ஆன இந்த சிறுவனின் அதிரடி ஆட்டம் ஏற்படுத்திய தாக்கம், கோலியின் 2016 சீசனை விட ஒரு படி மேலே உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த சீசனில் சூர்யவன்ஷியின் ஸ்ட்ரைக் ரேட் யாரும் நம்ப முடியாத வகையில் 242.85 ஆக உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் 240-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 100 ரன்கள் கூட எடுத்ததே இல்லை. ஆனால், சூர்யவன்ஷி வெறும் 15 வயதில் 680 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய டி20 தொடரில் தனது 2-ஆவது ஆண்டிலேயே விளையாடும் சூர்யவன்ஷி, உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை எல்லாம் சாதாரண பந்துவீச்சாளர்களைப் போல மாற்றிவிட்டார். ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் பந்தா? சிக்ஸர். மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்தா? சிக்ஸர். பாட் கம்மின்ஸ் வீசிய முதல் பந்தா? அதற்கும் சிக்ஸர் என 15 வயதிலேயே உலகின் டாப் பவுலர்களை மிரட்டியுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடருக்குப் பிறகு, மீண்டும் கோப்பையை வெல்லும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நீண்ட கால கனவிற்கு இந்த சிறுவன் தான் தற்பொழுது முக்கியத் தூணாக உள்ளார். இந்த சீசனின் 'மோஸ்ட் வேல்யுபிள் பிளேயர்' (MVP) பட்டியலிலும் அவரே முதலிடத்தில் உள்ளார்.
ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமானால், இறுதிப்போட்டியில் காத்துக்கொண்டிருக்கும் விராட் கோலியின் ஆர்சிபி அணியை அவர்கள் வீழ்த்தியாக வேண்டும். அந்தப் போட்டிகளிலும் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தான் அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தந்தால், ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த தனிநபர் சீசனாக இதுதான் வரலாற்றில் எழுதப்படும். சூர்யவன்ஷியின் சிறு வயது, அவரது அசாத்திய அதிரடி மற்றும் ராஜஸ்தான் அணியின் பல ஆண்டு காலக் காத்திருப்பு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது இது கோலியின் சாதனையை விடப் பெரியதாகவே கருதப்படும்.
ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த தனிநபர் சீசன்களைப் பற்றிப் பேசும்போது சில முக்கிய வீரர்களை நாம் மறக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருக்கும் கோலியின் 2016 சீசன் முதலிடத்தில் இருந்தாலும், மற்ற சில வீரர்களின் ஆட்டமும் பிரமாதமானது. கடந்த 2011-ஆம் ஆண்டில் கிரிஸ் கெய்ல் வெறும் 12 போட்டிகளில் 608 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் எப்படி அதிரடியாக ஆட வேண்டும் என்று உலகிற்குக் காட்டினார். அதனைத் தொடர்ந்து 2012 மற்றும் 2013 சீசன்களிலும் முறையே 733 மற்றும் 708 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதே போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரஸில் 2019-லும், சுனில் நரைன் 2024-லும் ஆல்-ரவுண்டர்களாகக் காட்டிய அதிரடி மிகவும் ஸ்பெஷலானது. குறிப்பாக 2019-ல் ரஸில் 5-ஆவது பேட்டிங் வரிசையில் களம் இறங்கி 205 ஸ்ட்ரைக் ரேட்டில் 510 ரன்கள் குவித்ததோடு 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி எதிரணிகளைப் பயமுறுத்தினார். மறுபுறம் 2024-ல் சுனில் நரைன் பந்துவீச்சில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமன்றி, ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களம் இறங்கி ஒரு சதம் உட்பட 488 ரன்கள் குவித்து கொல்கத்தா அணி 3-ஆவது முறை கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார். அந்த சீசனில் அவர் எடுத்த 450 புள்ளிகள் தான் ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் பெற்ற அதிகபட்ச புள்ளிகளாகும். இது தவிர 2022-ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஜோஸ் பட்லர், கோலிக்கு அடுத்தபடியாக ஒரே சீசனில் 4 சதங்கள் விளாசி 863 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்