"ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகுகிறாரா ஜெய்ஸ்வால்?" 15 வயது சிறுவனால் வந்த மாபெரும் சோதனை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதன்மை ஆட்டக்காரராக வைபவ் சூர்யவன்ஷி உருவெடுத்துள்ளது ஜெய்ஸ்வாலுக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Teen Cricket Sensation
Teen Cricket SensationTeen Cricket Sensation
Published on
Updated on
2 min read

ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மாறுவது உறுதியான போது, அடுத்ததாக அந்த அணியை வழிநடத்தப் போவது நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்தான் என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் நம்பியது. சஞ்சுவுக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் முகமாக ஜெய்ஸ்வால் தான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில மாதங்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அணியில் இணைந்த குறுகிய காலத்திலேயே, உலக கிரிக்கெட்டின் முன்னணி பந்துவீச்சாளர்களைத் தனது பயமற்ற ஆட்டத்தால் மிரட்டி வரும் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு பின்னால், ஜெய்ஸ்வால் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதன்மை ஆட்டக்காரராக வைபவ் சூர்யவன்ஷி உருவெடுத்துள்ளது ஜெய்ஸ்வாலுக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்து, 48 சராசரியுடன் அசத்திய ஜெய்ஸ்வால், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராகப் பார்க்கப்பட்டார். ஆனால், தற்போது 2026 மே மாத நிலவரப்படி, 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி அனைத்துப் புள்ளிவிவரங்களிலும் ஜெய்ஸ்வாலை விடப் பலமடங்கு சிறப்பாகச் செயல்பட்டு அவரை ஓரங்கட்டியுள்ளார். இந்த இளம் புயலின் அசுர வளர்ச்சியால் கிரிக்கெட் உலகமே வியந்து போயுள்ள நிலையில், ஜெய்ஸ்வால் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறார். அவர் தனது ஆட்ட முறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும், இல்லையென்றால் தனது ஒட்டுமொத்தப் புகழையும் இந்தச் சிறுவனிடம் இழக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, ஜெய்ஸ்வால் உடனடியாக வைபவ் சூர்யவன்ஷியின் நிழலில் இருந்து வெளியேறி, வேறொரு அணியில் தனக்கான ஒரு புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்று அதிரடியான ஆலோசனையை வழங்கியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒரு அசாத்திய வீரருடன் இணைந்து விளையாடும் போது, ஒவ்வொரு முறையும் ஜெய்ஸ்வாலின் திறமை மறைக்கப்பட்டு விடுகிறது. ஜெய்ஸ்வாலும் ஒரு தனித்துவமான சூப்பர் ஸ்டார் தான் என்பதால், அவர் வேறொரு அணிக்குச் சென்றால் தனியாக நின்று போட்டிகளை வென்று கொடுப்பார். அவருக்குத் தேவையான சுதந்திரமும், பெரிய தளமும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேறுவதுதான் நல்லது என்று ராயுடு தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ராயுடு, வைபவ் சூர்யவன்ஷியுடன் விளையாட ஒரு சீனியர் பார்ட்னர் இருந்தால் மட்டும்தான் இந்தச் சூழ்நிலையைக் கையாள முடியும் என்றும், ஜெய்ஸ்வாலால் அவருடன் போட்டி போட முடியாது என்றும் கூறினார். அவர் நன்றாக விளையாடுவதைப் பார்த்துப் பெருமைப்படலாமே தவிர, அவரோடு களத்தில் போட்டி போட நினைப்பது ஜெய்ஸ்வாலுக்குப் பின்னடைவைத்தான் தரும். எனவே, ஜெய்ஸ்வால் தான் முதன்முதலில் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமான மும்பை நகரத்தின் அணிக்காக விளையாடுவதுதான் அவரது எதிர்காலத்திற்கு மிகச்சிறந்த முடிவாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு ஜெய்ஸ்வால் சென்றால், அது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும் என்று அம்பதி ராயுடு ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com