இந்திய கிரிக்கெட் உலகில், முன்னாள் வீரர் இர்பான் பதானின் ஐந்து வருடப் பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தோனியின் கேப்டன்சியில் தான் இந்திய அணியில் இருந்து வெளியேறியது குறித்து இர்பான் பதான் பேசியிருக்கிறார்.
அந்த வீடியோவின் முதல் பகுதியில், இர்பான் பதான், தோனியுடன் தனது நிலை மற்றும் அணியில் தனது செயல்பாடு குறித்துப் பேசிய உரையாடலைப் பற்றிப் பேசுகிறார். பின்னர் அவர், “நான் யாருடைய அறையிலும் தேவையில்லாமல் பேசுவது இல்லை. அனைவருக்கும் அது தெரியும். சில சமயங்களில், பேசாமல் இருப்பதே நல்லது. ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை மைதானத்தில் சிறப்பாக விளையாடுவதுதான், அதைத்தான் நான் என் கவனம் முழுவதும் வைத்திருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.
இர்பான் பதான் கடைசியாக 2012 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். அதுவே அவரது கடைசி ஒருநாள் போட்டியாக இருந்தபோதிலும், அவர் அதில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் செய்தி தளமான 'InsideSport' உடன் பேசிய யோக்ராஜ், "இது இர்பான் பதான் பற்றி மட்டுமல்ல. கௌதம் கம்பீர் இதைப் பற்றிப் பேசியுள்ளார். வீரேந்திர சேவாக் இதை வெளிப்படையாகக் கூறினார். ஹர்பஜன் சிங் கூட, தான் ஒரு ஈயைப் போல அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறினார். தோனி ஏன் அப்படிச் செய்தார் என்பதை விசாரித்து ஒரு நீதிபதிகளைக் கொண்ட குழு அமைக்க வேண்டும். எம்.எஸ்.தோனி இதற்குப் பதிலளிக்க விரும்பவில்லை. பதிலளிக்க விரும்பாத அவருக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறது" என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், அவர் தோனி, கபில் தேவ் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோரை நேரடியாகத் தாக்கினார். அவர்கள் வீரர்களைச் சரியாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். யோக்ராஜ் ஏற்கனவே கடந்த காலங்களில் தோனி மற்றும் கபில் தேவ் இருவரையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். கபில் தேவ் காரணமாகத்தான் தான் அணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், ஒருமுறை கபில் தேவின் தலையில் துப்பாக்கியை வைத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய யோக்ராஜ் சிங், "நான் பிஷன் சிங் பேடி, கபில் தேவ், எம்.எஸ்.தோனி ஆகியோரைப் பற்றிப் பேசுகிறேன். இவர்களுடன் நான் இருந்திருக்கிறேன். இவர்கள் வீரர்களை மிகவும் மோசமாக நடத்தியுள்ளனர். 'தவறு என்பது தவறுதான்'. இரண்டு தவறுகள் ஒருபோதும் ஒரு சரியை உருவாக்காது. நான் இதை வெளிப்படையாகக் கூறுகிறேன், நமது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணியை நமது கேப்டன்கள் அழித்துவிட்டனர்" என்றும் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.