
“THUG LIFE” இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மொழி குறித்து பேசிய கருத்து பெரும் பிரச்சனையாக வெடித்து “THUG LIFE” திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்தும் திரைப்படத்தை வெளியிடக் கோரியும் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பிரச்சனையின் பின்னணி என்ன?
ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள “THUG LIFE” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் (மே 24) அன்று நடைபெற்றது.
இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டு பேசினார், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேசிய கமல், “சிவராஜ் குமார் அவர்களின் குடும்பம் எனக்கு கர்நாடகாவில் இருக்கும் மற்றொரு வீடு, அதனால் தான் எனது பேச்சை துவங்கும்போது தமிழே, உறவே, உயிரே என ஆரம்பித்தேன். தமிழிலிருந்து தோன்றியது தான் உங்கள் (கன்னடம்) மொழி எனக்கூறிவிட்டார். அதிலிருந்து வெடிக்க துவங்கியது சர்ச்சை.
பெரும்பான்மையான கன்னட அமைப்புகளும் பாஜக கட்சியினரும் தொடர்ந்து கமலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
மன்னிப்பு கேட்க மறுப்பு!
“ஆனால் இந்த விவகாரம் குறித்து மீண்டும் கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அப்போது பேசிய கமல் “நான் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அன்பிலிருந்தே.. மேலும் மொழி குறித்த பிரிவினையை ஏற்படுத்த நான் அவ்வாறு பேசவில்லை. மேலும் இந்த பிரச்னையை கன்னட அமைப்புகள் குழப்பிக்கொள்கின்றனர். நான் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றைத்தான் கூறினேன். தவிர கன்னட மக்களை எப்போதும் என் மீது அன்பை பொழிந்துள்ளனர். thug life படத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், நான் உட்பட எந்த ஒரு அரசியல்வாதிக்கும் இந்திய மொழிகள் பேச எந்த தகுதியும் இல்லை, உண்மையான அன்பு என்றுமே மன்னிப்பு கூற தேவை இல்லை” என்று கூறியிருந்தார்.
கன்னட நீதிமன்றத்தின் சாடல்
இந்நிலையில் thug life படத்தை கர்நாடகாவில் திரையிட மாத்தி வேண்டும் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு அளித்திருந்தார், ஆனால் நீதிமன்றம் “எந்த அடிப்படையில் தமிழ் மொழியிலிருந்து கன்னடம் பிறந்தது என்று கூறுகிறீர்கள் அதை பற்றி பேச மொழியியல் ஆராய்ச்சியாளரா நீங்கள்? யாராக இருந்தாலும் கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியது தவறு. எனவே மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கமலஹாசன் கர்நாடக திரைப்பட வர்த்தக சபாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “நான் பேசிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனக்கு வருத்தமளிக்கிறது. கன்னட மொழியை இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. சினிமா என்பது மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர மக்களை பிரிக்கக்கூடாது” என கூறியுள்ளார்.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபாவிற்கு கமல் எழுதிய கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நீதிபதி “மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்பதை விடுத்து என் சுற்றி வளைத்து பேசுகிறார். கடிதத்தில் என் ஒரு இடத்தில கூட மன்னிப்பு என்ற வார்த்தை இல்லை” என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த நிலையில் கர்நாடகாவில் ஜூன் 5 ஆம் தேதி படம் வெளியிடப்பட இருந்த “THUG LIFE” திரைப்படம் ஜூன் 10 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏன் மன்னிப்பு கோர தேவையில்லை!
உண்மையில் கமல் மொழி பிரிவினையை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கருத்தை பதிவிடவில்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி திராவிட மொழிக்குடும்பங்களின் தாயாக தமிழ் மொழி உள்ளது. மேலும் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலாச்சார விழுமியங்களைக்கொண்டது தமிழ்.
ஒரு மொழி செம்மொழி என்ற அடையாளத்தினை அடைய அதற்கு அதன் தனித்தன்மை மிக முக்கியம். தமிழ் மொழியிலிருந்து பிற மொழி வார்த்தைகளை எடுத்துவிட்டால் கூட தமிழால் தனித்து இயங்க முடியும் என்பதே உண்மை. அதுமட்டுமின்றி தொன்மை, பிறமொழித்தாக்கமின்மை, தூய்மை, தனித்தன்மை, இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு, பொதுமைப் பண்பு, நடுநிலைமை, பண்பாடு, பட்டறிவு வெளிப்பாடு, உயர் சிந்தனை வெளிப்பாடு, மொழிக் கோட்பாடு போன்ற அனைத்து தன்மைகளும் தமிழில் உள்ளது. ஆகவே கமல் ஹாசன் சொன்ன கருத்து பொய் ஏதுமில்லை.
அரசியல் காரணங்கள்!
கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் உள்துறை அமைச்சர் அமிட்ஷாவும் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
உள்துறை அமைச்சர் அமிட்ஷா அடாவடியாக “இந்திய மொழிகள் அனைத்துமே சமஸ்கிருதத்தில் இருந்துதான்” தோன்றியது என பேசியிருக்கிறார், அதற்கு அவர் யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திய ஒன்றியம் பல பிராந்தியங்களின் கூட்டமைப்பு, இன்னமும் இது ஒரு ஜனநாயக நாடாகவே நம்பப்படுகிறது. இந்த ஒன்றியத்தில் பல்வேறு இனக்குழுக்களை கொண்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள், தனிப்பட்ட யாருக்கும் இந்த தீபகற்பம் சொந்தமல்ல. ஒருவேளை இந்த நாட்டை யாரேனும் சொந்தம் கொண்டாட வேண்டும் என்றால், அதன் ஆதிகுடிகளான தமிழர்களே சொந்தம் கொண்டாட முடியும் என நவீன இந்தியாவின் தந்தை மராத்தியரான அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்க சொல்வதற்கு நீதிமன்றங்கள் எதற்கு?
நடிகர் கமல் ஹாசனுக்கு ஆதரவாக பல பேர் தமிழகத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். மே -17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது பதிவில்,
“சமஸ்கிருதமே இந்திய மொழிகளின் தாய்மொழி என அமித்ஷா சொன்னபோது, ஒருவேளை, கன்னட அமைப்புகள் அமித்ஷா மன்னிப்பு கேட்கவேண்டும், பாஜக கர்நாடகத்திற்குள் செயல்படக்கூடாது என சொல்லி இருந்தால், இதே கருத்தை நீதிபதி வெளியிட்டிருப்பாரா? (கன்னட அமைப்புகள் சமஸ்கிருதத்தை நோக்கி இக்கேள்வி எழுப்ப மாட்டார்கள்.
சமஸ்கிருதத்திலிருந்து கன்னடம் வந்தது என சொன்ன போதெல்லாம் அமைதிகாத்த கன்னட அமைப்புகள் கமலுக்கு மட்டும் எதிராக பொங்குவது மொழி மீதான அன்பினாலா அல்லது தமிழ்-தமிழர்கள் மீதான வெறுப்பினாலா?
தமிழ், கன்னடம் மற்றும் இதர திராவிட மொழிகள் குறித்து ஆய்வரங்கங்கள், விவாதங்கள் நடப்பது குறித்து நீதிமன்றங்கள் பேசி இருந்தால் ஆரோக்கியமானதாக இருந்திருக்கலாம். மாறாக மன்னிப்பு கேட்க சொல்வதற்கு நீதிமன்றங்கள் எதற்கு?
கன்னடர்களின் 'இந்தி எதிர்ப்பை' திட்டமிட்டு 'தமிழ் எதிர்ப்பாக' மாற்றுகிறது ஆரிய ஆர்.எஸ்.எஸ் அரசியல். நீதிமன்ற தீர்ப்புகள் இதற்கு துணை போகிறதா என்பதே நம் கவலை என அவர் பதிவிட்டுள்ளார்.
கமலுக்கு பெருகும் ஆதரவு
"வரலாற்று உண்மையை கமல்ஹாசன் பேசியுள்ளார்.. அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை" என கன்னட மொழி குறித்த கமல்ஹாசன் பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு
இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். “தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் உங்களுக்கு என்ன ஈகோ?, தமிழில் இருந்து கன்னடம் வரவில்லை என்றால் அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? வரலாற்றை படித்தவர் கமல். சித்தராமையாதான் வரலாற்றை படிக்க வேண்டும். KGF, காந்தாரா உள்ளிட்ட கன்னடப் படங்கள் தமிழகத்தில் இடையூறின்றி ஓடின” என அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில் கன்னட நீதிமன்றம் இன்று மதியத்திற்குள் இந்த விவகாரத்திற்கு மன்னிப்பு கேட்டால் வழக்கை விசாரிப்போம் எனக்கூறியுள்ளது, ஆனால் கெடு முடிந்தும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.