
ஒவ்வொரு நாள் தூங்கும்போதும் மனிதன் இறந்த நிலையை அடைகிறான் என சொல்லுவார்கள், தூக்கம் என்பது மனிதனின் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் தூங்கும்போது வரும் கனவுகளும் அதே அளவு முக்கியமானது தான்.
அதிலும் இந்தியா போன்றொரு நாட்டில் வாழும் மனிதர்களுக்கு வரும் கனவுகள் கலாச்சாரம், பண்பாடு, மத ரீதியாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. மேலும் நமக்கு வரும் கனவுகளை வைத்து எதிர்காலத்தை கணிக்கமுடியும் என்ற சொல்லாடலும் உண்டு. ஆனால் உண்மையில் கனவுகள் எங்கிருந்து வருகின்றன? அவற்றின் அர்த்தம் என்ன? என்ற பல கேள்விகளுக்கு 20 ஆம் நூற்றாண்டிலேயே பதிலளித்தவர் சிக்மண்ட் பிராய்டு.
மனோ பகுப்பாய்வின் தந்தை என அறியப்படுகிற சிக்மண்ட் பிராய்டு, இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நரம்பியல் நிபுணர், மருத்துவர், உளவியலாளர் மற்றும் செல்வாக்கு மிக்க சிந்தனையாளராக அறியப்பட்டார்.
பிராய்ட் 1856 மே -6 அன்று மொராவியாவின் ஃப்ரீபெர்க்கில் (இன்று செக் குடியரசின் பிரிபோர்) யூத கம்பளி வியாபாரிகளின் குடும்பத்தில் பிறந்தார். பிராய்ட் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வியன்னாவில் கழித்தார். ஆராய்ச்சி விஞ்ஞானியாக தனது பயணத்தை தொடங்கிய இவர், மனோதத்துவ பகுப்பாய்வில் தனது ஆர்வத்தை செலுத்தினார்.
சர்ச்சையும் செல்வாக்கும்..!
பிராய்ட் அந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமான சிந்தனையாளராக, மருத்துவராக திகழ்ந்தார். உலகம் முழுவதும் பலர் பிராய்ட் -ன் தத்துவங்களை கருத்துக்களை பின்தொடர்ந்தனர்.
இன்று Gen Z - க்கள் அதிகம் பயன்படுத்தும் ‘Trauma’ என்ற குழந்தை பருவ நினைவுகளின் வெளிப்பாட்டை பிராய்ட் தெளிவாக விளக்கினார்.
மனித நடத்தை அல்லது செயல்பாடுகள் பெரும்பாலும் குழந்தைப் பருவ (நினைவுகளிலிருந்து) அனுபவங்களிலிருந்து உருவாகும் மயக்கமற்ற உந்துதல்களால் தீர்மானிக்கப்படுகிறது, குறிப்பாக காதல், இழப்பு, நட்பு பாலியல், சமூகத்துடனான உறவுமுறை மற்றும் உடன்பிறந்தவர்களிடம் சிக்கலான உணர்ச்சி இபை அனைத்துமே அதன் விளைவுதான் என்று வாதிட்டார்.
“மனம் ஒரு சிக்கலான ஆற்றல் கட்டமைப்பு..அந்த கட்டமைப்பில் மனிதருக்கு நிகழும் நினைவுகளின் வெளிப்பாடே உளவியலின் சரியான மாகாணம்”
என்ற பிராய்டின் கூற்றுப்படி, அவர் மனித மனங்களை வரலாற்று தொன்மங்களை ஆழமாக படிக்க துவங்கினார், அதன் விளைவாக மனித இருத்தலின் மற்றொரு கோணத்தை ஆய்ந்தார். இதன் விளைவாக மூலம் அவர் ஆழமாகப் போற்றப்பட்ட , பின்பற்றப்பட்ட கலாச்சார விழுமியங்களை கேள்விக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
கனவுகளின் விளக்கம்
பிராய்ட்டின் முக்கிய படைப்புகளில் ஒன்று 1899 ஆம் ஆண்டு வெளியான ‘கனவுகளின் விளக்கம்” என்ற நூல். இந்த நூல் பிராயிடின் பல சிறந்த சிந்தனைகளை வெளிப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். இந்த நூலில், ஃப்ராய்ட் கனவுகளின் விருப்ப நிறைவேற்றம் (wish fulfillment) என விளக்கி, அவை நமது அசாதாரண எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன என்று கூறுகிறார். நரம்பியல் நிபுணரான பிராய்டு, தனது நோயாளிகள் , சக ஊழியர்களின் நினைவுகளை கவனித்தார். இந்த புத்தகம் பெரும்பாலும் தரவுகளாலும், பலர் சாட்சியங்களாலும் நிறைந்தது. கனவுகளையும் குறியீடுகளையும், இறந்த கால அனுபவங்களையும் வைத்து கனவுகளை தீர்மானித்தார் பிராய்டு. பல சமயங்களில் அது சரியாகவே இருந்திருக்கிறது.
பிராய்டு தனது மனதையும், நோயாளிகளின் மனதையும் பகுப்பாய்வு செய்யும்போது “கனவுகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாத விருப்பங்களின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன” என்பதை அறிந்துகொண்டார்.
"சிக்மண்ட் ஃப்ராய்டு தன்னுடைய கனவுகள் மற்றும் நோயாளிகளின் கனவுகளைப் பற்றிய அவதானிப்புகளின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை உருவாக்கினார். 'கனவுகளின் விளக்கம்' என்ற இந்த நூலை இரண்டு ஆண்டு கடும் உழைப்புக்கு பிறகு எழுதி முடிதத்தர். ஆரம்பத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும், அந்தப் புத்தகம் காலப்போக்கில் பிரபலமாகி, ஃப்ராய்டின் முக்கியமான படைப்பாக கருதப்படுகிறது."
மனிதர்களின் வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள், குழந்தை பருவ நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள், மனநோய்களின் பாதிப்புகள், பாலியல் ஈர்ப்புகள் , வெளியில் தெரியாமல் நடக்கும் மனக் கொந்தளிப்புகள், அடக்கப்படும் தீராத விருப்பங்களால் சமூகத்தை எதிர்கொள்வதில் மனிதர்களுக்கு ஏற்படும் தடுமாற்றங்கள், அவர்களின் கோபதாபங்கள் , குழந்தை வயதிலோ அல்லது முதிர் வயதிலோ முளைத்தெழும் பாலியல் எண்ணங்கள், உந்துதல்கள் என மனித மனங்களின் பரிணாமங்கள் குறித்த அவருடைய கோட்பாடுகள் அன்று விமர்சிக்கப்பட்டாலும் இன்றும் பல உளவியலார்களுக்கு கையேடாக திகழ்கிறது. அந்த நவீன உளவியலின் தந்தை என்று அறியப்படும் இவரின் 169 ஆவது பிறந்த தினம் இன்று.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்