
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா தம்பதியினரின் முதல் மகன் இன்பநிதி. இவர் லண்டனில் நிர்வாகம் தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும் கால்பந்து வீரரான இன்பநிதி சர்வதேச விளையாட்டுகளிலும் விளையாடியுள்ளார்.
இதுவரை இவர் வெளிப்படையாக அரசியல் மேடைகளில் பொதுக்கூட்டங்களில் தென்படாமல் இருந்தார். ஆனால் கடந்த ஆண்டு திமுக நிகழ்வுகளில் இன்பநிதி கலந்துகொள்ளத் தொடங்கினார். கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டார். மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கண்டு களித்தார். இந்த நிலையில் தான் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இயங்கும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகப் பிரிவில் இன்பநிதி பணிபுரியத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. கடந்த ஜூன் 3-ஆம் தேதி முதல் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. கார்த்திகேயன் தான் இங்கு தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் துர்கா ஸ்டாலினின் தமக்கை மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 11 மணிக்கு அலுவலகம் வரும் இன்பநிதி மாலை 5.30 மணி வரை அங்கு இருந்து பணிகளை கவனித்து வருகிறார். கலைஞர் தொலைக்காட்சியின் நிதி நிர்வாகப் பணிகள் தொடர்பாக அங்கு பணிபுரியும் முக்கிய நிர்வாகிகளுடன் தினமும் இன்பநிதி ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நடைமுறை அவர்களின் குடும்ப வழக்கம் தான். முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தில் பலரும் முரசொலி மற்றும் கலைஞர் டிவியில் நிர்வாகப் பொறுப்பில் இருந்து வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு முரசொலி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் முரசொலியின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி உள்ளார். அந்த வகையில் தான் இன்பநிதி கலைஞர் டிவி நிர்வாக பொறுப்பில் இணைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.