
திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தலைவலியை உருவாக்கி வந்த நிலையில் தற்போது மேயர்களும் அந்த பட்டியலில் சேர்ந்து வருகின்றனர்.
2024 தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி தான் சார்ந்திருக்கம் இந்தியா கூட்டணியுடன் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சியை பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் தீவிரமாக உழைத்து வருகிறார். களமும் கூட அவர்களுக்கு சாதகமாக உள்ளதாகத்தான் பல கருத்துக் கணிப்புகளும் தெரிவித்து வருகின்றன. இதை இப்படியே கட்டிக்காத்தால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், 2 ஆண்டுகாலம் ஆட்சியில் இருப்பதால் திமுக மீதான அதிருப்தி அலையும் ஒருபுறம் லேசாக தொடங்கியுள்ளது. இதனை பெரிதாக்கும் விதமாக அவ்வப்போது அமைச்சர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தனர். இவர்களின் செயல்களால் திமுக மீதான அதிருப்தி உருவாகி அது பாஜக கூட்டணிக்கு சாதகமாகிவிடக் கூடாது என்பதில் திமுக தலைமை தெளிவாக இருந்தது. இதனையொட்டி அமைச்சர்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தன. இதன் விளைவாக அமைச்சர்களும் இப்போது புதியதாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் அடங்கியே கிடக்கின்றனர்.
அமைச்சர்களே இப்படி அடங்கிக் கிடக்கும் இந்த சூழலில் மேயர்கள் உருவாக்கும் சர்ச்சைகள் தற்போது திமுக தலைமைக்கு புதிய தலைவலியை உருவாக்கி வருகின்றன.
கோவை மேயர் கல்பனா தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒருவரது வீட்டை காலி செய்வதற்காக அவரது வீட்டில் குப்பைகளை கொட்டுவருவதாகவும், அவரது வீட்டு சமையலறையில் சிறுநீரை பிடித்து வீசுவதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சச்சரவை ஏற்படுத்தி வந்தது. இதேபோல நெல்லை மேயர் சரவணனை மாற்றியே ஆக வேண்டும் என அவர் பதவிக்கு வந்தது முதல் கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த கவுன்சிலர்கள் அனைவரும் திமுகவை சேர்ந்தவரகள் என்பதுதான் இதில் முக்கியமானது. இப்படி இந்த இரண்டு மேயர்கள் பிரச்சினையே தீரக்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது புதியதாக சென்னை துணை மேயரும் இந்த பட்டியலில் தனாக வந்து இணைந்திருக்கிறார்.
சென்னை துணை மேயராக பதவி வகித்து வரும் மகேஷ்குமார், அமைச்சரர் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன் உட்பட 6 பேர் மீது சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப் பிரிவு மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது. சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த இசக்கியம்மாள் கடந்த 2021 ஆம் ஆண்டில் தன் கணவர் மற்றும் சென்னை துணைமேயர் மகேஷ்குமார் , குணசேகரன் ஆகியோர் இணைந்து ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கியதாகவும், தற்போது அவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இந்த நிறுவனத்தில் அவரது பங்குகளை துணைமேயர் உள்ளிட்டோர் அபகரித்து விட்டதாகவும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் தற்போது துணைமேயர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சர்ச்சையில் தற்போது துணைமேயர் சிக்கி இருப்பது திமுக மீதான அதிருப்தியை மக்களுக்கு அதிகப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக ஊழல் கட்சி என ஒரு புறம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதனால் சென்னை மாதிரியான பெருநகர பகுதிகளில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருப்போர் கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதே திமுக தலைமையின் எண்ணமாக இருந்தது. இதன் காரணமாகத்தான் பல்வேறு திமுக கவுன்சிலர்கள் இந்த பதவிக்கு வர ஆசைப்பட்ட போதும் துணை மேயராக மகேஷ் குமாரை தலைமை அடையாளம் காட்டியது. அவரே இப்போது சிக்கலில் சிக்கி இருப்பது திமுக தலைமைக்கு மேலும் தலைவலியை அதிகப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க:"சீமான், இரக்கமில்லாத மனிதர்" -நடிகை விஜயலட்சுமி!