"சீமான், இரக்கமில்லாத மனிதர்" -நடிகை விஜயலட்சுமி!

"சீமான், இரக்கமில்லாத மனிதர்" -நடிகை விஜயலட்சுமி!
Published on
Updated on
1 min read

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. அதைத்தொடர்ந்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். பூந்தோட்டம் உள்ளிட்ட சில படங்களில் விஜயலட்சுமி நடிக்கும் பொழுது, அப்போதைய இயக்குநரும், தற்போதைய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுடன் காதல் ஏற்பட்டு நாளடைவில் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், நடிகை விஜயலட்சுமியிடமிருந்து விலகிய சீமான்  கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த  விஜயலட்சுமி சீமான் குறித்து ஆபாச வார்த்தைகளால் வசைபாடி வீடியோ வெளியிட்டு வந்தார். 

இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் தொலைபேசியில் விஜயலட்சுமியை தொடர்புகொண்டு அநாகரிகமாக திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்து வந்தனர். பின்னர் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது நடவடிக்கை எடுக்ககோரி கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மீது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். அப்போது திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தில்,  சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் சதா ஆகியோர் தன்னை மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறியிருந்தார். இதையடுத்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதனிடையே, தன்னை தற்கொலைக்கு தூண்டிய சீமானை கைது செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை விஜயலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என  கூறினார்.  2008-ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்பாக சீமானின் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் சீமானுக்கும் தனக்கும் மாலை மாற்றி திருமணம் நடைபெற்றதாக தெரிவித்தார். 

சீமான், இரக்கமில்லாத மனிதர். அவருடைய மனைவியாக இருந்த தன்னையே மிக மோசமாக சித்தரித்து விமர்சித்தார் என கண்ணீர் விட்டு கதறினார். சீமானை கைது செய்யும் வரை தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும், அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக சாடினார். தான் வெளியிட்டுள்ள வீடியோக்களுக்கு சீமானின் பதில் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

சீமான் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com