ஆந்திரா கும்பலிடம் சிக்கி தவிக்கும் வடமாநில சிறுமிகள்

வடமாநில சிறுமிகளை வசமாக சிக்கவைத்து வேலை வாங்கி வருகிறது இந்த ஆந்திரா கும்பல்
ஆந்திரா கும்பலிடம் சிக்கி தவிக்கும் வடமாநில சிறுமிகள்

தப்பித்தோம், பிழைத்தோம் என தலை தெறிக்க ஓடி வந்த சிறுமிகள்... விரட்டி துரத்தி வந்த கும்பல்.... காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுமிகள் இரவோடு, இரவாக ரயில் ஏற்றப்பட்டனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம் தமிழகத்தின் வேலூர் மாவட்ட காட்பாடி எல்லையில் உள்ளது. இந்த குடிபாலா மண்டலத்தில் மாம்பழத்திலிருந்து சாறு எடுத்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றில் பணிபுரிவதற்காக தமிழகத்தின் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கூலி தொழிலாளிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவர்கள் குத்தகை அடிப்படையிலும் தினக் கூலி அடிப்படையிலும் பணியமர்த்தப் படுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்தும் குத்தகை அடிப்படையில் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களில் 14 முதல் 16 வயது சிறுமிகளும் அடக்கம்.

இது போல அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிறுமிகள் அங்கிருந்து தப்பியோடி வந்தனர். அவர்களை பிடிக்க கம்பெனியின் அடியாட்கள் துரத்தி வந்தனர். அப்போது மனித உரிமை காப்பாளர்கள் ஈஸ்வரன் மற்றும் சானாவாஸ் இருவரும் பொது மக்களோடு சேர்ந்து சிறுமிகளை காப்பாற்றி குடிபாலா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது தாங்கள் இடைத்தரகர்கள் மூலமாக இங்கு அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டதாகவும், "டாசா" என்கின்ற பழத்தொழிற்சாலையில் கூலி கொடுக்காமல் தங்களை அதிகமாக பணி செய்ய வைத்ததாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். இதனை கேட்ட போலீசார் அவர்களை இரவோடு இரவாக சித்தூர் ரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து பிரச்சனையை முடித்தனர். இது தொடர்பாக எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படாததுதான் பெரும் அதிர்ச்சி.

அதே நேரம் அந்த பழச்சாறு தொழிற்சாலையில் பணியாற்றும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியிலேயே மாம்பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை இருந்தால் இவ்வளது தூரம் அலைய வேண்டிய தேவையில்லை என்கின்றனர் ஆதங்கத்துடன். வேலூர் மாவட்டத்தில் மாம்பழச்சாறு தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை என்பது குறிப்பிடதக்கது.

வடமாநில சிறுமிகளை துரத்தி வந்தவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். குடிபாலா பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தப்பிப்பிழைத்த நிம்மதியுடனும், சொந்த ஊருக்கு செல்லும் மகிழ்ச்சியுடனும் ரயில் ஏறும் முன் டாட்டா காட்டி சென்றனர் சிறுமிகள் ....

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com