
சிங்கப்பூர்னு சொன்னாலே நவீன கட்டமைப்பு, ஒழுங்கு, நவீன போக்குவரத்துனு தான் நினைப்போம். ஆனா, ஒரு காலத்துல இந்த சிங்கை நகரத்து ரோடுகளை “கொசு பேருந்து”னு ஒரு சின்ன, சுறுசுறுப்பான பஸ் ஆட்டம் காட்டியிருக்கு. 1920கள், 1930கள்ல சிங்கப்பூரோட தெருக்களை ஆளுமை செய்த இந்த கொசு பேருந்து, வெறும் போக்குவரத்து வாகனம் இல்லை; அது ஒரு சமூக மாற்றத்தோட, உழைப்பாளி மக்களோட கதை.
கொசு பேருந்து - அறிமுகம்
கொசு பேருந்துனு சொல்றது, 1920 முதல் 1930 களோட ஆரம்பம் வரை சிங்கப்பூரோட சாலைகள்ல ஓடுன, 7-8 பயணிகளை ஏத்திக்க முடிஞ்ச சின்ன மோட்டார் பஸ்கள். இவையோட சைஸ் சின்னதா இருந்ததும், ட்ராஃபிக்குல கொசு மாதிரி நெளிஞ்சு, பயணிகளை தேடி ஓடுனதும் தான் இந்தப் பட்டத்துக்கு காரணம். இந்த பஸ்கள், பெரும்பாலும் ஃபோர்டு மாடல் T கார்களை மாற்றி, இருக்கைகளை அமைச்சு தயார் செஞ்சவை. சிங்கப்பூரோட கிராமப்புறங்களையும், நகரத்தையும் இணைக்குறதுக்கு இவை ஒரு முக்கியமான பாலமா இருந்தது. 1921ல 147 கொசு பஸ்கள் ஓடுச்சு, 1929ல இது 456 ஆக உயர்ந்தது, ஆனா இதுல பல பஸ்கள் லைசென்ஸ் இல்லாம ஓடுனவைனு சொல்லப்படுது.
இந்த பஸ்கள், உழைக்கும் மக்களுக்கு, குறிப்பா கூலி வேலை செய்யுறவங்களுக்கு, மலிவான, வேகமான பயணத்தை கொடுத்தது. ரிக்ஷா, ட்ராம்கள், ட்ராலி பஸ்களோட போட்டி போட்டு, இவை மக்களோட அன்றாட வாழ்க்கையை சுலபமாக்குச்சு. சிங்கப்பூரோட நேஷனல் லைப்ரரி போர்டு (NLB) சொல்றபடி, இந்த பஸ்கள், அந்த காலத்து போக்குவரத்து அமைப்பு இன்னும் முறைப்படுத்தப்படாத நேரத்துல, மக்களோட பயணத்துக்கு உயிரோட்டமா இருந்தது.
எப்படி தொடங்குச்சு? யாரு ஓட்டுனாங்க?
1920களோட ஆரம்பத்துல, சிங்கப்பூரோட மக்கள் தொகை பயங்கரமா உயர்ந்தது. நகரத்துக்கு வெளியே வாழுறவங்க எண்ணிக்கையும் அதிகமாச்சு. இதனால, ட்ராம்கள், ட்ராலி பஸ்கள் மட்டுமே இருந்த பொது போக்குவரத்து அமைப்பு திணற ஆரம்பிச்சு. ரிக்ஷாக்கள் இன்னும் முக்கியமா இருந்தாலும், இந்த கொசு பேருந்துகள் ஒரு புது போட்டியாளரா வந்தது. இந்த பஸ்கள், கிராமப்புறங்கள்ல இருந்து விவசாயிகளை, அவங்க பொருட்களை நகரத்துக்கு கொண்டு வந்தது. பின்னாடி, இவை நகர மையத்துலயும் ஓட ஆரம்பிச்சு, சிங்கப்பூர் ட்ராக்ஷன் கம்பெனி (STC) ஓட்டுன ட்ராலி பஸ்களுக்கு சவால் விட்டது.
தனித்தன்மை
கொசு பேருந்துகள், ஃபோர்டு மாடல் T சேஸிஸை அடிப்படையா வச்சு உருவாக்கப்பட்டவை. 1933ல, 90% பஸ்கள் இந்த மாடல் T சேஸிஸை உபயோகிச்சு. இவையோட உடம்பு மரத்தால செஞ்சது, பின்பக்கம் ஒரு ஓப்பன் இருக்கும். உள்ளே, இரு பக்கமும் மூணு பேர் உக்கார்ற மாதிரி பெஞ்ச்கள், ட்ரைவர் பக்கத்துல ஒரு சிங்கிள் சீட் இருக்கும். கண்டக்டர்கள், பின்பக்க ஸ்டெப்புல நின்னு, ஹேண்டிலை பிடிச்சு பயணிகளை மேனேஜ் பண்ணுவாங்க. புது டயர்கள், அந்த காலத்துல ஒரு நவீன கண்டுபிடிப்பா, இந்த பஸ்களோட பயணத்தை கொஞ்சம் கம்ஃபர்ட்டபிளா ஆக்குச்சு.
இந்த பஸ்கள், நகர மையத்துல இருந்து தஞ்சோங் பகார், பாசிர் பாஞ்சாங், கேலாங், புக்கிட் திமா மாதிரியான பகுதிகளுக்கு ஓடுச்சு. ஆரம்பத்துல, இவையோட நிலையான பஸ் ஸ்டாப் இல்லை. பயணிகள் இருக்குற இடத்துல நின்னு ஏத்திக்குவாங்க, சில சமயம் கோழி, பொருட்கள் எல்லாம் கூட ஏத்திக்குவாங்க. இந்த சுறுசுறுப்பு, மக்களுக்கு பயங்கர பிடிச்சிருந்தாலும், இதனால பாதுகாப்பு பிரச்சனைகளும் வந்தது.
பிரச்சனைகளும், விதிமுறைகளும்
கொசு பேருந்துகள் மலிவு, வேகம்னு இருந்தாலும், இவையோட ஓட்டுநர் பாணி கொஞ்சம் ‘வைல்டு’னு சொல்லலாம். ட்ராஃபிக்குல இப்போ நம்ம ஊருல ஓடும் ஷேர் ஆட்டோ போல, எந்தவித நெறிமுறைகளும், ரூல்சும் இல்லாம, இஷ்டத்துக்கு எல்லா கூட்டத்துக்குள்ளேயும் நுழைந்து சென்றதால ரிக்ஷா ஓட்டிகளுக்கு இவை ஒரு பெரிய போட்டியா மாறுச்சு. 1927ல, ரிக்ஷா ஓட்டுனவங்க கோபத்துல மூணு கொசு பஸ்களை உடைச்ச சம்பவம் கூட நடந்திருக்கு.
இந்த பஸ்களோட வேகம், அவசரமான ஓட்டுநர் பாணி, இவையெல்லாம் விபத்துகளை அதிகரிச்சு. 1923ல, நிலையான பஸ் ஸ்டாப்களை அறிமுகப்படுத்தி, எங்கேயும் நிக்குறதை தடுக்க ஒரு விதி வந்தது. 1927ல, 20 மைல் (32 கிமீ/மணி) வேக வரம்பு, வண்டியோட உள்ளேயும் வெளியேயும் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் காட்டுறது, வருஷத்துக்கு நாலு முறை இன்ஸ்பெக்ஷன் இப்படி பல விதிமுறைகள் வந்தது. ஆனாலும், பஸ் உரிமையாளர்கள் இந்த விதிகளை மீறி, இன்ஸ்பெக்ஷனுக்கு புது பார்ட்ஸ் போட்டு, பின்னாடி பழைய பார்ட்ஸை திரும்ப உபயோகிச்சு ஏமாத்துனதா சொல்லப்படுது.
ஒரு மாற்றத்தின் தொடக்கம்
1930களோட ஆரம்பத்துல, கொசு பேருந்துகளோட எண்ணிக்கை பயங்கரமா உயர்ந்தாலும், இவையோட பாதுகாப்பு பிரச்சனைகள் அரசாங்கத்துக்கு தலைவலியா மாறுச்சு. 1933ல, ஃபோர்டு மாடல் T சேஸிஸ் உள்ள பஸ்களுக்கு லைசென்ஸ் கொடுக்க மாட்டோம்னு ஒரு பெரிய அறிவிப்பு வந்தது. இதோட நோக்கம், பொது போக்குவரத்தை மேம்படுத்தி, பெரிய, நவீன பஸ்களை அறிமுகப்படுத்துறது. இந்த பஸ்களை ரெண்டு வருஷத்துக்குள்ள படிப்படியா நீக்குறதுனு திட்டம்.
இந்த முடிவுக்கு சிங்கப்பூர் பஸ் உரிமையாளர்கள் அசோசியேஷன், அலுவலக ஊழியர்கள், பள்ளி குழந்தைகளோட பெற்றோர்கள் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சாங்க. கிராமப்புறங்கள்ல வாழுறவங்க, இந்த பஸ்களை தான் வேலை, பள்ளிக்கு போறதுக்கு நம்பியிருந்தாங்க.
ஒரு புது காலத்துக்கு வழி
1934ல, STC-யோட ட்ராலி பஸ்கள், ஆம்னிபஸ்கள் கொசு பஸ்களை மாற்றி, நகரப் பகுதிகள்ல முழு ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்சு. இதனால, அலுவலக ஊழியர்கள், பள்ளி குழந்தைகள் கூட்ட நெரிசல் பிரச்சனைகளை சந்திச்சாங்க. 1939க்கு பிறகு, கொசு பஸ்கள் நகர மையத்துல இருந்து முழுசா மறைஞ்சு, பாசிர் பாஞ்சாங் ரூட்ல மட்டும் ஓடுச்சு.
இரண்டாம் உலகப் போர் காலத்துல (1942-45), ஜப்பானிய ஆக்கிரமிப்பு நேரத்துல, எரிபொருள் பற்றாக்குறை, ட்ராலி பஸ்களோட மின்சார கேபிள்கள் சேதமானது இவையெல்லாம் பொது போக்குவரத்தை பாதிச்சு. இதனால, சில கொசு பஸ்கள் மறுபடி ரிப்பேர் செய்யப்பட்டு, STC சர்வீஸை சப்போர்ட் பண்ணுச்சு. 1938ல, STC ஊழியர்கள் ஆறு வார ஸ்ட்ரைக்குல ஈடுபட்டபோது, அரசாங்கம் அவசர சர்வீஸுக்கு கொசு பஸ்களை திரும்ப கொண்டு வந்தது.
கொசு பேருந்துகள் மறைஞ்சாலும், இவையோட தாக்கம் இன்னும் இருக்கு. 1935ல, 10 சீன பஸ் கம்பெனிகள் – க்ரீன் பஸ் கம்பெனி, கெப்பல் பஸ் கம்பெனி, சூன் லீ பஸ் கம்பெனி, நோ ஹாக் பஸ் கம்பெனி உட்பட – உருவாக்கப்பட்டது. இவை, STC-யோட நகர சர்வீஸுக்கு பதிலா, கிராமப்புறங்களை கவர் பண்ணுச்சு. 1970ல, இந்த கம்பெனிகள் ஒண்ணு சேர்ந்து மூணு பெரிய கம்பெனிகளா – Amalgamated Bus Services, Associated Bus Company, United Bus Company – மாறுச்சு. 1973ல, இவை மூணும் ஒண்ணு சேர்ந்து Singapore Bus Service Limited ஆக மாறுச்சு, இப்போ இது SBS Transit Limited-னு அழைக்கப்படுது.
கொசு பேருந்து, சிங்கப்பூரோட பொது போக்குவரத்து வரலாற்றுல ஒரு தனித்துவமான அத்தியாயம். இது வெறும் பஸ் இல்லை; சீன இம்மிக்ரண்ட்ஸோட உழைப்பு, முயற்சி, சமூக மாற்றத்தோட ஒரு குறியீடு. 1920கள்ல ஒரு சின்ன ஃபோர்டு மாடல் T-யை வச்சு, கிராம மக்களை நகரத்தோட இணைச்ச இந்த பஸ்கள், சிங்கப்பூரோட வளர்ச்சிக்கு ஒரு அடித்தளமா இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்