அலட்சியமாக தடுப்பூசி போட்ட செவிலியர்! நடவடிக்கை எடுக்குமா அரசு?

அலட்சியமாக தடுப்பூசி போட்ட செவிலியர்! நடவடிக்கை எடுக்குமா அரசு?
Published on
Updated on
2 min read

3 மாத குழந்தைக்கு அலட்சியமாக தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தைக்கு காலில் வீக்கம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகன், பிரியா தம்பதிக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
 
குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், 100-வது நாள் ஊசி போடுவதற்கு செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தைக்கு இடது கால் தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட மறுநாள், ஊசி போடப்பட்ட இடது தொடையில் கட்டி போன்று பெரிதாக சிவந்த நிறத்தில் காணப்பட்டது. ஊசி போடப்பட்ட இடத்தை தேய்க்க வேண்டாம் என செவிலியர் கூறியிருந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் வீக்கத்தை குறைக்க ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுத்த போதும், கட்டி பெரிதாகிக்கொண்டே போயுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த குழந்தையின் பாட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இனிமேல் குழந்தை விஷயத்தில் தாமதிக்ககூடாது என நினைத்த தாயும், பாட்டியும், தனியார் மருத்துவமனையை நாடியுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஊசி போடும்போது குழந்தையின் தொடை பகுதியில் உள்ள சதையை இரு விரல்களில் சேர்த்து பிடித்து ஊசி போட்டிருக்க வேண்டும், ஆனால், செவிலியர் அலட்சியமாக ஊசி போட்டதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 

மேலும் குழந்தையின் தொடை பகுதியில் பாதியளவு கட்டி பரவியுள்ளதாகவும், இன்னும் தாமதித்தால் எலும்பு பகுதி வரை சென்று எலும்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பதறிய குழந்தையின் பெற்றோர், உடனடியாக சிகிச்சையளிக்கும் படி கேட்டுக்கொண்டதின் பேரில், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைக்கு காலில் ஏற்பட்ட கட்டியை அகற்றினர்.

பச்சிளம் குழந்தையென்றும் பாராமல் அலட்சியமாக செயல்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களை போல் இனிமேல் யாரும் பாதிக்கக்கூடாது எனவும் குழந்தையின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com