நெல்லையில் பதினோராம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு… போதைப்பொருள் பழக்கத்தினால் ஏற்பட்ட தகராறில் விபரீதம்!

சிறுவர்களிடையே பெயிண்ட், பெவிக்கால், குவிக் பிக்ஸ் உள்ளிட்ட பொருள்களின் மூலம் போதையை ஏற்றிக் கொள்ளும்...
நெல்லையில் பதினோராம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு… போதைப்பொருள் பழக்கத்தினால் ஏற்பட்ட தகராறில் விபரீதம்!
Published on
Updated on
1 min read

நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் வாலிபர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இடையே போதை பழக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதன் காரணமாக நடக்கும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதற்கு தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் இன்று திருநெல்வேலியில் போதை பொருள் பழக்கத்தால் 11 ஆம் வகுப்பு மாணவன் வெட்டப்பட்ட சம்பவம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவிலைச் சேர்ந்த 11ஆம் வகுப்புப் படித்து வரும் இரண்டு சிறுவர்களுக்கு இடையே வாக்குவாதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது ஆத்திரமடைந்த ஒரு சிறுவன் உடனிருந்த மற்றொரு சிறுவனை அரிவாளால் வெட்டியதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வெட்டுப்பட்ட சிறுவனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Admin

மேலும் இது குறித்து அம்பாசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முதற் கட்ட விசாரணையில் தகராறில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், போதைப் பொருளை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அரிவாள் வெட்டு வரை சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் சிறுவர்களிடையே பெயிண்ட், பெவிக்கால், குவிக் பிக்ஸ் உள்ளிட்ட பொருள்களின் மூலம் போதையை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் பரவலாக உள்ளது தெரிவித்து இதனை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர். தொடர்ந்து இது போன்று கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கிடையே போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்து குற்றச் சம்பவம் நடந்து வருவது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com