“15 வயது சிறுமி..  ஓராண்டிற்குள் 2-வது முறையாக கர்ப்பம்” - ஒரே நபரால் இருமுறை சீரழிக்கப்பட்ட கொடூரம்?

14 வயது சிறுமி தொடர்பான மற்றொரு போக்சோ வழக்கை விசாரித்தபோதுதான்
karnataka pocso
Published on
Updated on
2 min read

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் 15 வயது சிறுமி ஒருவர் ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக கர்ப்பமானது தெரியவந்ததை அடுத்து, போக்சோ-வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு தனித்தனி வழக்குகளை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு, மீண்டும் மீண்டும் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை, சிறுமி ஏற்கனவே பெற்றெடுத்த முதல் குழந்தையின் இருப்பிடம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பழைய ஹுப்பள்ளி காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 வயது சிறுமி தொடர்பான மற்றொரு போக்சோ வழக்கை விசாரித்தபோதுதான், இதே குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி மீண்டும் கர்ப்பமாக இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து ஹுப்பள்ளி-தார்வாட் காவல் ஆணையர் என். சசி குமார் கூறுகையில், இரு சிறுமிகளும் இரண்டு சகோதரிகளின் மகள்கள் என்றும், இந்தச் சம்பவங்கள் அனைத்தும் குடும்பத்திற்குள்ளேயே நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

தார்வாட் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரி அளித்த புகாரின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட நபர், 15 வயது சிறுமியை ரயில் நிலையம் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மேலும், அந்த குழந்தையை சிறுமியின் பெற்றோர் அடையாளம் தெரியாத ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாதத்தில் அதே நபர் மீண்டும் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அதன் விளைவாக அவர் ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய காவல் ஆணையர் என். சசிகுமார், " இந்த குற்றச் செயல்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வரும் வழக்கு. ஏற்கனவே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த 15 வயது சிறுமி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இரு சிறுமிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குடும்பத்திற்குள்ளேயே நடந்த சம்பவமா என்பது உட்பட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது," என்றார்.

மேலும், இரு சிறுமிகளும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் இதுவரை எந்தவித வாக்குமூலமும் அளிக்கத் தயாராக இல்லை என்றும், உடல்நலம் தேறிய பிறகு அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

குடும்ப உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவங்கள் எவ்வாறு நடைபெற்றன, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், 15 வயது சிறுமி பெற்றெடுத்த முதல் குழந்தை தற்போது உடல்நலக் குறைவு காரணமாக கார்வாரில் உள்ள உறவினர்களிடம் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாகவும், அந்த தகவலையும் காவல்துறையினர் தனியாக சரிபார்த்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சிறுமி இரண்டு முறை கர்ப்பமான சூழ்நிலைகள், முதல் குழந்தையின் தற்போதைய நிலை, குடும்ப உறுப்பினர்களின் பங்கு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com