8-ம் வகுப்பு மாணவியை.. நூலகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை? கணினி ஆசிரியர் கைது!

மாணவியின் வாக்குமூலம், மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் குடும்பத்தினரின் புகார் ஆகியவற்றின் அடிப்படையில்
bihar pocso case
Published on
Updated on
1 min read

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு, பள்ளி கணினி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி, முங்கர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவரது நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதை குடும்பத்தினர் கவனித்துள்ளனர். வழக்கமாக இருந்ததைவிட அமைதியாகவும், மன உளைச்சலுடனும் இருந்ததால், வீட்டில் வைத்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவலை மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, பள்ளியில் பணியாற்றும் ஆஷிஷ் குமார் என்ற கணினி ஆசிரியர், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி நூலகத்திற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி குடும்பத்தினரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கைகலப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்த முயன்றது. நிலைமை பதற்றமாக மாறியதால், 112 அவசர உதவி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியையும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட 14 வயது மாணவி கர்ப்பமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இருப்பினும், இந்த தகவலை காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மருத்துவ பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே இது குறித்து தெளிவான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. தர்ஹாரா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சோனு குமார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவியின் குடும்பத்தினர் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த புகார் கிடைத்தவுடன், சட்டப்படி வழக்கு பதிவு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மாணவியின் வாக்குமூலம், மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் குடும்பத்தினரின் புகார் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுகள் உறுதியாக நிரூபிக்கப்பட்டால், ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com