பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் பயங்கரம்! காரைச் சுற்றிவளைத்து நகைகளைக் கொள்ளையடித்த ஆயுதக் கும்பல்!

விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த இந்தியர் ஒருவரின் காரை பல வாகனங்களில் வந்த மர்ம கும்பல் சுற்றிவளைத்து, துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்த இந்தத் தாக்குதலில் இந்தியர் மற்றும் அவருடன் பயணம் செய்த பெண் காயமடைந்துள்ளனர்.
Indian man attacked in Peru
Indian man attacked in Peru
Published on: 
Updated on: 
2 min read

பாதுகாப்புக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட குண்டு துளைக்காத சொகுசு காரில்கூட பயணம் செய்தாலும், திட்டமிட்டு நடத்தப்படும் ஆயுதக் கொள்ளையிலிருந்து தப்பிப்பது எளிதல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் வெளிநாட்டில் நடந்துள்ளது. விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த இந்தியர் ஒருவரின் காரை பல வாகனங்களில் வந்த மர்ம கும்பல் சுற்றிவளைத்து, துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்த இந்தத் தாக்குதலில் இந்தியர் மற்றும் அவருடன் பயணம் செய்த பெண் காயமடைந்துள்ளனர். காரின் பாதுகாப்பையும் மீறி உள்ளே புகுந்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் உடைமைகள் அடங்கிய பைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

29 வயதான விஜய் பக்ரானி இசா (Vijay Pagrani Iza) என்ற இந்தியரும், 35 வயதான மாரி நட்டலி மிராண்டா எஸ்பினோசா (Mari Nataly Miranda Espinoza) என்ற பெண்ணும் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இருவரும் விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த நிசான் சென்ட்ரா கார் அவர்களது ஜீப் மீது மோதியுள்ளது. இதையடுத்து மற்ற வாகனங்களில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் காரைச் சுற்றிவளைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவுக்கு அருகில் உள்ள காலாவோ பிராந்தியத்தின் லா பெர்லா பகுதியில், கோஸ்டா வெர்டே நெடுஞ்சாலையில் காலை சுமார் 6.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. அப்போது பொதுமக்கள் பலரும் தங்களது அன்றாடப் பணிகளுக்காக வெளியேறிக்கொண்டிருந்தனர். திடீரென கேட்ட துப்பாக்கிச் சத்தத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

காரைச் சுற்றிவளைத்த மர்ம நபர்கள் துப்பாக்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளால் அதன் ஜன்னல்கள், முன்பக்கக் கண்ணாடிகளை நோக்கிச் சுட்டுள்ளனர். குண்டுகள் துளைக்காத கண்ணாடி என்பதால் உடனடியாக உள்ளே செல்ல முடியாத நிலையில், ஒருவர் துப்பாக்கியின் பின்பகுதியைக் கொண்டு பக்கவாட்டுக் கண்ணாடியை உடைத்துள்ளார். பின்னர் கதவைத் திறந்து உள்ளே இருந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளையில் குறைந்தது எட்டு பேர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொள்ளையர்கள் தப்பிச் செல்லும்போது தங்களது செல்போன்களைச் சாலையின் கீழ்ப்பகுதியில் வீசியதாகவும் கூறப்படுகிறது. கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மூலம் அந்தச் செல்போன்கள் எங்கு வீசப்பட்டன என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவற்றை மீட்டு, கொள்ளைக் கும்பலின் தொடர்புகளைப் பின்தொடர விசாரணைக் குழுக்கள் முயற்சி செய்து வருகின்றன.

இருவரும் துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன், தாக்குதலின்போது ஏற்பட்ட வெட்டுக் காயங்களுடனும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் மற்றொரு முக்கிய அம்சமும் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் அவருடன் இருந்த பெண்ணுக்கு பெரு, ஈக்வடார் நாடுகளில் விலைமதிப்புள்ள உலோகங்கள் விற்பனை மற்றும் ஏற்றுமதி தொடர்பான வணிகத் தொடர்புகள் இருப்பதாக உள்ளூர் நாளிதழான எல் கொமெர்சியோ தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட சந்தைகளுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிக மதிப்புள்ள ஏற்றுமதி நடவடிக்கைகளில் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஈடுபட்டதாகவும் செய்தி கூறுகிறது.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பக்ரானி குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் தங்கத்தை எடுத்துச் சென்றபோது கொள்ளையடிக்கப்பட்டதாகவும், அப்போது 8.4 லட்சம் டாலருக்கும் அதிக மதிப்புள்ள தங்கம் திருடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பழைய கொள்ளை வழக்கில் மூன்று பேர் பின்னர் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். இந்தப் பழைய சம்பவத்துக்கும் தற்போது நடந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை. தற்போதைய தாக்குதலில் தங்கத்தைக் குறிவைத்தார்களா அல்லது காரில் இருந்த நகைகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகளைக் கொள்ளையடிப்பதுதான் நோக்கமா என்பதையும் போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே பின்தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.