

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் சுவேதா (24). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அஜித்குமார் (28) என்பவருக்கும் சுவேதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. அதையடுத்து பத்து மாதங்களுக்கு முன்பு தான் இருவரும் திருமணம் செய்துள்ளனர். சுவேதாவிற்கு இதற்கு முன்பு இரண்டு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் எரியோடு பாண்டியன் நகரில் வசித்து வந்துள்ளனர். அஜித்குமார் தனது நண்பர்களுடன் நேற்று மது அறிந்து கொண்டிருந்தபோது அவரது மனைவி சுவேதாவின் நடத்தை சரியில்லை என்று நண்பர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் வீடு திரும்பி இரவு முழுவதும் சுவேதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற அஜித்குமார் வீட்டில் வைத்திருந்த அருவாளை எடுத்து சுவேதாவின் கழுத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் சுவேதா துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எரியோடு போலீசார் உயிரிழந்த ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.