

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் தந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொத்தனார் தினேஷ் (31) போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மோசமான பாலியல் வன்கொடுமைகள் தினம் தினம் நடந்துகொண்டிருக்கின்றது, மேலும் நாட்டின் எந்த பகுதியும் பெண்களுக்கு 100% பாதுகாப்பை வழங்குவதில்லை.
அதிலும் தமிழகத்தில், நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், நெஞ்சை பதற வைக்கின்றனர். சமீபத்தில் கோயமுத்தூரில் 19 வயது கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. கடந்த 2022 கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் ஒரு நாளைக்கு 90 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இவை வெறும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவுதான். இன்னும் எத்தனையோ வழிகளில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றனர். அப்படி ஒரு மற்றொரு மோசமான சம்பவம்தான் கும்பகோணத்தில் நடைபெற்று உள்ளது.
கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் தனது சகோதரிக்கு குழந்தை பிறந்துள்ளதால், பெண் ஒருவர் துணைக்கு வந்து மருத்துவமனையில் தங்கியுள்ளார். அப்போது அவரது கணவரும், 6 வயது பெண் குழந்தையும் உடன் வந்துள்ளனர். இந்நிலையில் அந்த ஆறு வயது சிறுமி தனது தந்தையுடன் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனை காத்திருப்பு அறையில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் படுத்திருந்த வலங்கைமானை சேர்ந்த கொத்தனார் தினேஷ் (31) என்ற நபர் தந்தையுடன் படுத்திருந்த ஆறு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .
இதனைத் தொடர்ந்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினரின் தீவிர விசாரணைக்கு பிறகு தினேஷை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.